பர்கூர் அருகே 900 ஆண்டு பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு!

பர்கூர் அருகே 900 ஆண்டு பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு!

பர்கூர் அருகே 900 ஆண்டுகள் பழமையான 2 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை 11ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது. முதலாவது நடுகல்லில், வீரன் ஒருவன் அம்பு எய்வது போல் செதுக்கப்பட்டுள்ளது. அந்த வீரனின் உடலில் 8 இடங்களில் அம்பு பாய்ந்துள்ளது. அந்த கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழனின் 33ம் ஆண்டு ஆட்சிக்காலத்தில், அதாவது 1103 ஆண்டு கால்நடைகள் மீட்பு பூசலில் இறந்த வீரனுக்காக எடுக்கப்பட்டது. முதலாம் குலோத்துங்க சோழன் 1070ம் ஆண்டிலிருந்து 1120ம் ஆண்டு வரை 50 ஆண்டு காலம் சோழ நாட்டை ஆண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. புறநானூறு கூறுவது, வெட்சிப் பூவை சூடி கள்வர் ஆநிரைகளைக் கவர்ந்து வருவர். இது நடுகற்களில் தொறுக் கொள்ளுதல் (கால்நடைகளை மீட்கச் செல்வது) என அழைக்கப்படுகிறது. அதே நேரம் கரந்தை பூச்சூடி பகை நாட்டு கள்வர் கவர்ந்து சென்ற கால்நடைகள் தமது இடத்துக்கு மறவர் மீட்டு வருவார்கள்.

இவ்வாறான தொறு பூசலில் இருபக்கமும் மறவர்கள் மாள்வர். போரில் வீழ்த்தப்பட்ட மறவர்களுக்கு நடப்பட்ட நடுகற்கள், அவர்கள் வீழ்ந்த ஊர்களிலேயே நடப்படுவது உண்டு. அப்படிப்பட்ட நடுகல் தான் இது. இதில் வீரனின் இடதுபுறம் மேற்பகுதியில் இரு தேவமங்கையர் வீரனை சொர்க்கத்துக்கு அழைத்து செல்லும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் கீழ் பகுதியில் ஆநிரையை மீட்கும் தொறு பூசலை குறிக்கும் வகையில் மாடு, ஆடு, மான் ஆகிய வளர்ப்பு விலங்குகள் தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளன. ஊர் காமிண்டர் (ஊர் கவுண்டர்) மகன் கலிஞ்சிறை தம்மசெட்டி, காவல் காப்பதில் வல்லவன். இவன் காளந்தாகமங்கலம் என்ற இடத்தில் கால்நடைகளை மீட்பதற்காக நடந்த சண்டையில் இறந்தான் என்ற செய்தியை இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. கலிஞ்சிறை கடுமையான காவல் இருந்து இறந்தான் என கங்காவரம் கல்வெட்டும் கூறுகிறது. இதன் அருகே, புலிக்குத்திப்பட்டான் கல் ஒன்று தெலுங்கு மொழி கல்வெட்டுடன் காணப்படுகிறது. கால்நடைகளை காக்க புலியுடன் போரிட்டு இறந்த வீரனுக்காக இந்த நடுகல் வைக்கப்பட்டுள்ளது. இதுவும் 900 ஆண்டுகள் பழமையானதான இருக்கலாம். மூன்றாவது கல்வெட்டும் தொறுமீட்டல் பற்றியதாகும். இதுமட்டுமல்லாமல் இவ்விடத்தில் உள்ள நிலத்தில் 11ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த லிங்கமும், நந்தி சிலையும் கிடைக்க பெற்ற கோயில் வழிபாட்டில் உள்ளது. இந்த கோயிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட கிணறு ஒன்றும் உள்ளது. கிணற்றை வட்டமாக கட்ட அதற்கேற்றவாறு அதனுடைய செங்கல் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: