புதுக்கோட்டை அருகே, 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, கற்றளிக் கோவில் மற்றும் கற்சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளுக்கோட்டை அருகே, நண்டம்பட்டி கிராமத்தில் உள்ள வீமன்குளத்தின் கரையில், சில மாதங்களுக்கு முன், நீர்வரத்து பாலம் அமைக்கும் பணி நடந்தது. அப்போது, சில கற்சிற்பங்கள் வெளிப்பட்டுள்ளன. அங்கு, தொல்லியல் ஆய்வு கழகத்தினர், கள ஆய்வு மேற்கொண்டனர்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
நண்டம்பட்டி கிராமத்தின் ஒரு பகுதி, புதுக்கோட்டை மாவட்டம், செங்களுர் ஊராட்சியிலும், தஞ்சாவூர் மாவட்டம், புதுக்குடி ஊராட்சியிலும் அமைந்துள்ளது. இவ்வூரின் குடுக்கன் தரிசு என்ற இடத்தில், ஏராளமான இடைக் காலத்தைய பானை ஓடுகள் கிடக்கின்றன. இதே பகுதியில், 5 ஏக்கரில், ஆங்காங்கே கட்டுமானக் குவியல்களும், செங்கற்களும் காண முடிகிறது.
அடித்தளம் முதல் கலசம் வரை, முற்றிலும் கருங்கல்லை கொண்டு எழுப்பப்பட்ட கற்றளி கோவில், வழிபாட்டில் இருந்துள்ளது. தியான கோலத்தில், 1 அடி உயரமுள்ள முக்குடை அமைப்புடன் கூடிய சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்றும், கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியிலேயே சமண பள்ளி இருந்திருக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும், இப்பகுதியில் சமணமும், சைவமும் பரவி இருந்திருக்கும் என்றும் அனுமானிக்க முடிகிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சிற்பங்களை சேகரித்து, அருங்காட்சியகத்திலோ அல்லது அரசு கட்டுப்பாட்டிலுள்ள ஏதேனும் ஒரு பொது இடத்திலோ பாதுகாத்து, அவை மேலும் சிதைந்து விடாதபடி பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மங்கனுார் மணிகண்டன் கூறினார்.