செங்கம் அருகே 8-ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

செங்கம் அருகே 8-ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

செங்கம் அருகே உள்ள மணிக்கல் கிராமத்தில் செக்கு கல்வெட்டு இருப்பதாக அந்த பகுதி மக்கள் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்திற்கு தகவல் தெரிவித்தார். அப்போது 10-ம் நூற்றாண்டு எழுத்தமைதியை சேர்ந்த ‘ஆநந்தஎயிரர் இட்ட செக்கு’ என்ற வாசகம் கொண்ட எழுத்து பொறிப்பு காணப்பட்டது. இதன் அருகில் வட்டெழுத்து கல்வெட்டு உள்ள நடுகல் வலது புறம் உடைந்து கல்வெட்டு முழுமை பெறாமல் இருந்தது. நடுகல்லின் உடைந்த பகுதி வேறெங்கிருந்தோ கொண்டு வந்து இந்த நடுகல்லின் அருகில் இட்டு சென்றுவிட்டனர். அந்த உடைந்த நடுகல்லை ஆய்வு செய்யும் போது ஏற்கனவே நின்று கொண்டிருந்த நடுகல்லின் தொடர்ச்சியாக இருப்பது தெரியவந்தது. இருகல்லையும் ஒன்று சேர்த்து பழைய நிலைக்கு கொண்டு வந்து, அதன் கல்வெட்டு தகவலை படியெடுத்து ஆய்வு செய்யப்பட்டது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இந்நடுகல்லில் வீரனின் இடது கையில் வில்லும், வலது கையில் குறுவாளும் உள்ளது. வலது புறம் குத்துவிளக்கும், இடது புறம் சிமிழும், கெண்டியும் உள்ளன. மேற்பகுதியில் தோரணம் உள்ளது.

நடுகற்களை ஆய்வு செய்த கல்வெட்டு அறிஞர் பூங்குன்றன் கூறுகையில், ‘இந்நடுகல் 8-ம் நூற்றாண்டை சேர்ந்த பரமேஸ்வரவர்மனின் 6-ம் ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டுள்ளது. பல்குன்றக்கோட்டத்து மேல்வேணாட்டை ஆட்சி புரியும் ஊணமிரையார் என்ற இனக்குழுத் தலைவன் ஆட்சி காலத்தில் கந்தவாணரைசர் என்பவன் மணிக்கல் என்ற ஊரில் உள்ள எருதாக்கணத்தான் என்பவரின் எருது மற்றும் பசு மந்தையை கவரும்போது நடந்த சண்டையில் எருதாக்கணத்தான் என்பவர் இறந்துவிட்டார் என்பது கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நடுகல்லின் இடதுபுற கல்வெட்டு செய்தி மட்டுமே இதுநாள் வரையில் தொல்லியல் துறையினரால் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது கிடைத்த வலது புறக்கல்லில் உள்ள கல்வெட்டோடு சேர்த்ததில் முழுமையான செய்தி கிடைத்துள்ளது. தொறு பூசலில் இறந்த எருதாக்கணத்தான் என்பவர் பெயரே ஒரு சுவாரஸ்யம் மிக்கது. எருது+ஆ (பசு) நிறைந்த மந்தையை உடையவன் என்ற காரணப்பெயரோடு காணப்படுகிறது.

தமிழ் எழுத்துக்களை சேர்த்து எழுதும் வழக்கம் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பே சாதாரண மக்களிடைய தமிழ் இலக்கணத் தேர்ச்சி இருப்பதும் இங்கு சிறப்பாக குறிப்பிடலாம். மணிக்கல் என்ற ஊரின் பேரும் அன்றிலிருந்து இன்று வரை எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்வதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் மூலம் நடுகற்கள் எந்த அளவிற்கு மொழி வளத்திற்கும், சமூக வரலாற்றிற்கும் துணை புரிகின்றன என அறியலாம். இதுபோன்று பல நடுகற்கள் உடைந்து போயும், கல்வெட்டுகள் சிதைந்தும் பல இடங்களில் காணப்படுகின்றன. அவற்றையும் கண்டறிந்து ஆய்வு செய்தால் இன்னும் பல அரிய வரலாற்று செய்திகள் கிடைக்கப்பெறும். தமிழக தொல்லியல் துறையும், பொதுமக்களும் இதுபோன்ற நடுகற்களை பாதுகாக்க முன் வரவேண்டும் என்பதே வரலாற்று ஆய்வாலர்களின் வேண்டுகோள்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: