திருப்பத்தூர் அருகே கி.பி. 8-ஆம் நூற்றாண்டு பல்லவர் காலத்து நடுகல் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே கி.பி. 8-ஆம் நூற்றாண்டு பல்லவர் காலத்து நடுகல் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே கி.பி. 8-ஆம் நூற்றாண்டு பல்லவர் காலத்து நடுகல் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன் காந்தி, காணிநிலம் மு.முனிசாமி, ஆசிரியர் சத்தியராஜ் ஆகியோர் மேற்கொண்ட களஆய்வில் இந்த நடுகல் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து பேராசிரியர் க.மோகன் காந்தி கூறியது:

திருப்பத்தூர்-திருவண்ணாமலை சாலையில் 15-ஆவது கி.மீட்டரில் சிம்மணபுதூர் ஊர் அமைந்துள்ளது. இந்த ஊரிலிருந்து ஜவ்வாதுமலையின் அடிவாரத்துக்குச் செல்லும் அடர்ந்த காட்டு வழியில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த நடுகல் ஆநிரைக் கவர்தல் மற்றும் மீட்டலில் உயிர் விட்ட வீரனுக்கு எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். எழுத்துக்கள் சரியாகப் படிக்கமுடியவில்லை. எழுத்துக்களின் படிநிலை வளர்ச்சி மற்றும் நடுகல்லின் தோற்றத்தை வைத்துப் பார்க்கும் போது, இது பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது.

இந்த நடுகல்லை இங்குள்ள பொதுமக்கள் வேடியப்பன் என்று அழைக்கின்றனர். 3 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட இந்த நடுகல்லில், வீரன் வலது பக்கத்தில் கொண்டையிட்டு, காதுகளில் குண்டலத்துடன் காணப்படுகிறான். வலது கையில் குறுவாள், இடது கையில் வில் உள்ளன. போரில் பகைவர் பலரைக் கொன்று தானும் இறந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாகும்.

எக்கூர், சிம்மணபுதூரில் வாழும் பொதுமக்கள் ஆடி மாதத்தில் மாரியம்மனுக்குக் கூழ்வார்க்கும் போது முதல் படையலை இந்த வேடியப்பனுக்கு வைத்துச் செல்வதை அறிய முடிகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாட்டுப்புற மக்களின் வாழ்வியலோடு இந்த நடுகல் கலந்துள்ளதை இதன் மூலம் அறியலாம் என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: