திருச்சி அருகே 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே உத்தமர்சீலியில் 8ம்நூற்றாண்டை சேர்ந்த ஆட்சியாளர்களின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. முசிறி அறிஞர் அண்ணா அரசுகலைக் கல்லூரி பேராசிரியை அகிலா, திருச்சி தனியார் கல்லூரி வரலாற்றுதுறை தலைவர் நளினி ஆகியோர் திருச்சி கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலியில் இரண்டு புதிய கல்வெட்டுகளை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து டாக்டர் ராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வுமைய இயக்குனர் டாக்டர் கலைக்கோவன் கூறியிருப்பதாவது: திருச்சி கல்லணை சாலையில் உத்தமர்சீலியில் உள்ள வேணுகோபாலர் கோயிலில் இரண்டு புதிய கல்வெட்டுகளும், பெயர் பொறிக்கப்பட்ட நிலஅளவு கோல் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. சோழ பேரரசர் முதல் பராந்தகரின் மகன்களுள் ஒருவரான உத்தமசீலியின் பெயரால் சோழர்காலத்தே அமைந்த உத்தமசீலி சதுர்வேதி மங்களமே தற்போது உத்தமர்சீலியாக பெயர் சுருக்கம் பெற்றுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இவ்வூரில் உள்ள விஷ்ணு, சிவன் கோயில்கள் இரண்டுமே சோழர்கால படைப்புகள் ஆகும். குழல் ஊதும் கண்ணனுக்காக தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட மிக சில கோயில்களுள் ஒன்றாக விளங்கும் வேணு கோபாலர் கோயில் பிற்சோழர் கால இறைதிரு மேனியை கொண்டுள்ளது. அருமையான கட்டுமானத்துடன் விளங்கும் இக்கோயிலின் பெருமண்டப கிழக்குசுவரில் அடர்த்தியான சுண்ணாம்பு வண்ணபூச்சிகளின்கீழ் இரண்டாம் பாண்டிய அரச மரபை சேர்ந்த மாறவர்மர் சுந்தர பாண்டியரின் எட்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு மறைந்திருந்தது. எல்லைகற்களில் விஷ்ணுவின் சக்கராயுதம் பொறிக்கப்பட்டு வேணுகோபாலருக்கு உரிமைஉடையதாக செங்கனிவாய் நல்லூரில் காடாக இருந்த பகுதியை விளைச்சலுக்கு கொண்டுவர உடன்பாட்டு ஆவணமாக இக்கல்வெட்டு விளங்குகிறது. சுந்தர பாண்டியரின் எட்டாம் ஆட்சி ஆண்டுமுதல் செங்கனிவாய்நல்லூரில் உள்ள காடுகளை வெட்டி திருத்தி பயிர்செய்துகொள்ள வழிபிறந்தது.

கார், மறு, பாசனம், வம்பு ஆகிய நான்கு பருவத்திற்கு ஏற்ப இஞ்சி, மஞ்சள், வாழை, கரும்பு ஆகியவற்றுடன் பருத்தி, ஆமணக்கு உள்ளிட்ட புன்செய் பயிர்களும் விளைவித்து கொண்டு ஊர் குளங்களில் மீன் வளர்ப்பும் மேற்கொள்ள ஒப்புக்கொண்ட இந்த ஒப்பந்தம் ஊரின் தேவைக்கேற்ப குடியேற்றங்களை ஏற்படுத்தி கொள்ளவும் வழி அமைத்தது. கோயிலின் பெருமண்டப வடக்கு தாங்கு தளத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டு பொதுகாலம் 1517ல் கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. பெரிய எழுத்துகளில் கிரந்தமும், தமிழும் கலந்த நிலையில் காணப்படும் இந்த கல்வெட்டில் மங்கள சொற்களையும், கணபதி வாழ்த்தையும், கால குறிப்பையும் மட்டுமே கொண்டு தொடர்ச்சியின்றி உள்ளது.

பெருமண்டபத்தில் தென்பகுதி தாங்குதளத்தில் கண்டறியப்பட்டுள்ள அளவுகோல் இரண்டு கூட்டல் குறிகளுக்கு இடையில் ஆன 2.18 மீட்டர் நீளமுள்ள நிலமளந்த கோலாகும். அதன்அருகே காணப்படும் 14ம் நூற்றாண்டு எழுத்துவடிவில் உள்ள கல்வெட்டு நிலமளந்தகோலின் பெயரை குறிக்கிறது. ராஜவிபாடன் எனும் பெயரில் வழங்கிய இந்த அளவுகோல் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இதேகால கட்டத்தில் வழக்கில் இருந்த நிலமளந்த கோலாகும். இந்த புதியகல்வெட்டுகள் கண்டுபிடிப்பு கல்வெட்டு துறையினருக்கு தெரிவிக்கபட்டுள்ளது. இவ்வாறு கலைக்கோவன் கூறியுள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: