தமிழ்நாட்டு என்ற பெயரை சென்ற நூற்றாண்டில் ஒருவரின் போராட்டத்தினால் பெற்றதாகத்தான் சரித்திரத்தில் சொல்கிறார்கள்.
ஆனால், 800 ஆண்டுகளுக்கு முன்னரே பல்லவ மன்னர்களின் வழி வந்த காடவராயன் கோப்பெருஞ்சிங்கப் பல்லவன் என்ற மன்னனை போற்றுவதற்கு தமிழ்நாடு என்ற பெயரை கல்வெட்டுகளில் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த கோப்பெருஞ்சிங்க பல்லவன், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் என்ற ஊரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்துள்ளார். சோழர்களோடு நெருங்கிய உறவு கொண்டிருந்த இந்த பல்லவ மரபினர்கள் அவர்களிடம் பெண் கொடுத்தும், பெண் எடுத்தும் உள்ளனர்.
இவர்கள் கட்டிய கோவில்களில் காணப்படும் கல்வெட்டுகளில், தூய தமிழ்நாடு காத்த பெருமான்”, “நாயனார் அழகிய சியரான தமிழ்நாடு காத்தான் பல்லவராயர்”, “பேணுசெந்தமிழ் வாழப்பிறந்த காடவ கோப்பெருஞ்சிங்கன்” என பலவாறு புகழப்பட்டிருக்கிறான் இந்த மாமன்னன்.
தமிழ்நாட்டை காப்பாற்றியதிலும், செந்தமிழை வளர்த்ததிலும் காடவ கோப்பெருஞ்சிங்க பல்லவன் தலைசிறந்து விளங்கியிருக்கிறார் என்று இதன் மூலம் தெரியவருகிறது.
கி.பி. 13 ஆம் நூற்றாண்டிலேயே “தமிழ் நாட்டை காப்பாற்றியவன்” என்றும் “ஒரு தாய் தன்னுடைய குழந்தையை பேணுவதைப் போல செந்தமிழை வாழவைக்க பிறந்தவன்” என்றும் சோழர்கள் காலக் கல்வெட்டில் குறிப்பிட்டவர் “காடவன் கோப்பெருஞ்சிங்கப் பல்லவன்” ஆவார் .
“தமிழ் நாடு காத்த பெருமான்”, “பேணு செந்தமிழ் வாழப்பிறந்த காடவன்” என இவரைப்போல வேறு எந்த அரசர்களும் இவ்வளவு பெருமையாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டது கிடையாது.