திருப்பத்தூர் அருகே கி.பி.7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே கி.பி.7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே கி.பி.7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூரை அடுத்த பெருமாப்பட்டு அருகே கி.பி. 7-ஆம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நடுகல்லில் வீரன் வலது கையில் வாளும் இடது கையில் வில்லும் ஏந்தித் தாக்குவது போல் வடிக்கப்பட்டுள்ளது. மேலே எழுத்துப் பொறிப்புகள் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. அவை சிதைந்து மங்கிய நிலையில் காணப்படுகின்றன. வீரனது காலடியில் அழகான மதுக்குடுவையும், சிமிழும் காணப்படுகின்றன.

அதன் அருகில் பாய்ந்து செல்லும் குதிரையில் வீற்றிருக்கும் மற்றொரு வீரனுக்கான நடுகல் காணப்படுகிறது. வீரன் தன் வலது கையில் போர் வாளினை ஏந்தியுள்ளான்.
இடது கையால் குதிரையின் கடிவாளத்தினைப் பற்றி குதிரையினை வேகமாகச் செலுத்தியவாறு வடிக்கப்பட்டுள்ளான். காற்றினைக் கிழித்துக் கொண்டு பாயும் குதிரை, காற்றில் பறக்கும் அவனது ஆடைகள் என கலை நுணுக்கத்துடன் இக்கல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இக்கல்லிலும் எழுத்துக்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. இக்கல்லின் ஊடாக பெரிய வேப்பமரம் ஒன்று வளர்ந்துள்ளதால், கல்லினை காண்பதற்கு இடையூறாக உள்ளது. இரண்டு நடுகற்களுமே நான்குபுறமும் பலகைக் கற்கள் நடப்பட்ட கற்திட்டைகளுக்குள் இருந்தவையாகும். அதற்குச் சான்றாக அக்கற்கள் கீழே சரிந்து கிடக்கின்றன. இவ்விரண்டு நடுகற்களும் இப்பகுதியில் நடைபெற்ற போரில் உயிர்துறந்த வீரர்களுக்காக எடுக்கப்பட்டவை என்பது தெளிவாகத் தெரிகிறது. நடுகற்களில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் அடங்கிய வாசகங்கள் யாவும் மிகவும் சிதைந்துள்ளன. அவை தெளிவாக இருந்திருப்பின் இந்நடுகல் வீரர்கள் யாவர், எக்காலத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் எதற்காக மடிந்தனர் என்பது தெரிந்திருக்கும். சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் நடுகற்களில் எஞ்சியுள்ள ஒரு சில எழுத்துக்களை ஒப்பிடுகையில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புண்டு.
மேலும், அண்மையில் சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே ஓலக்கோடு என்ற இடத்தில் வட்டெழுத்துடன் கூடிய கி.பி. 7-ஆம் நூற்றாண்டு நடுகல் ஒன்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது. அந்த நடுகல்லினைப் போலவே பெருமாப்பட்டில் உள்ள நடுகற்கள் உள்ளன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: