ஆம்பூர் அருகே கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 5 நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ஆம்பூர் அருகே கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 5 நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ஆம்பூர் அருகே கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 5 நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ஆம்பூர் அருகே கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 5 நடுகற்களும், கொற்றவை சிற்பம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், ஆசனாம்பட்டு அருகில் ஒரு தோப்பில் எழுத்துடைய மூன்று நடுகற்கள் ஆய்வு செய்யப் பெற்றன.

அவற்றில் இரண்டு நடுகற்கள் கம்பவர்மன் என்ற பல்லவ மன்னனின் 29-ஆம் ஆட்சி ஆண்டில் மாடுபிடி சண்டையில் இறந்த இரண்டு வீரர்களுக்குத் தனித்தனியே நடப்பட்ட நடுகற்கள் ஆகும். அவற்றில் ஒரு நடுகல்லில் படுவூர்க்கோட்டத்து பாலியூர் நாட்டு ஒச்சூர் சந்திரசேகரனின் வீரன் தொறுவை (மாட்டு மந்தையை) கவர்ந்தபோது பல்விரியூர் நாட்டு வெள்கியூருடைய வாணிகர் மாட்டு மந்தையை மீட்டு இறந்தனர்.

இரண்டாவது நடுகல்லில் அதே மாடுபிடி சண்டையில் சிறுபாழ் நாட்டு அச்சமங்கலத்தைச் சேர்ந்த வேட்டரடிவியமன் மாட்டு மந்தையை மீட்டு இறந்தார். இதில் ஒரு வீரன் சிறுபாழ் நாட்டைச் சேர்ந்தவன். மற்றொரு வீரன் பல்விரியூர் நாட்டைச் சேர்ந்தவன். மாட்டு மந்தையைக் கவர்ந்தவன் படுவூர்க் கோட்டத்தைச் சேர்ந்தவன் பல்விரியூர் நாட்டின் எல்லைப் புறத்தில் ஓச்சூர் இருந்திருக்க வேண்டும். பாலியூர் நாட்டு ஓச்சூர் அருகிலேயே பல்விரியூர் நாட்டு வெள்கியூரும், சிறுபாழ் நாட்டு அச்சமங்கலமும் இருந்திருக்க வேண்டும். கவரப்பட்டமாட்டு மந்தை இருக்குடிகளுக்குரிய மந்தையாக இருந்திருக்கலாம். பெரும்பாலும் இந்த இருகுடிகளும் வாணிகக்குடிகளாக இருந்திருக்க வேண்டும். இவர்கள் ஓரிடத்தில் மாட்டு மந்தையைப் பட்டி போட்டு வைத்திருக்க வேண்டும். சந்தையில் விற்பதற்காக இங்கு பாதுகாப்பாக வைத்திருந்த போது மந்தை எதிரிகளால் கவரப்பட்டிருக்க வேண்டும். நடுகல் பகுதியில் மாட்டுப் பொருளாதாரமே மேலோங்கியிருந்தது. அதனால் தான் மாட்டைக் கவர்வதிலும், மீட்பதிலும் இங்கு வாழ்ந்த மக்கள் சண்டையிட்டுக் கொண்டு மாண்டுள்ளனர்.

இந்த இரு நடுகற்களும் வணிக வீரர்களுக்காக நடப்பட்டுள்ளன. ஒரு நடுகல்லில் வணிகர் மாட்டு மந்தையை மீட்டு மாண்டார் என்று கூறுகின்றது. மற்றொரு நடுகல்லில் வேட்டரடிவியமன் மாட்டுமந்தையை மீட்டும் பட்டான் என்று கூறுகிறது. இவனும் வணிக வீரனாக இருந்திருக்க வேண்டும். மாட்டு வளர்ப்பு மிகுந்திருந்த இந்தப் பகுதியில் மாட்டு வணிகர் மிகுந்திருந்தனர். கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் வணிகர் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. புலிசாத்து (புலியானூர்) வாணிகர் ஊர்(நடுப்பட்டி), சாத்துப்பாடி (தாழையூத்து) போன்ற பெயர்களால் அறிய முடிகிறது.

கீழ்க்கண்டவாறு கல்வெட்டு வாசகம் கிடைக்கிறது :
“படுவூர் கோட்டம் பாழி நாட்டு
ஓச்சூர் சந்திர சேகரன் ஆண்டான்
குலைய மாறன் தொறு கொள்ள
சிறுபாழ் நாட்டு
அச்சமங்கலம் உடைய
வேட்டரெடி
வியமன்
தொறு மீட்டுப் பட்டான்’
என கல்வெட்டு வாசகம் வருகிறது. மேலும், அச்சமங்கலம் என்ற கல்வெட்டில் வருவது திருப்பத்தூருக்கு அருகாமையில் இருக்கக் கூடிய ஊராகும்.ஏனெனில் அச்சமங்கலம் என்ற பெயரிலேயே இன்றும் இவ்வூர் வழங்கப்படுவதை காணமுடிகிறது. இந்த ஊரில் வசிக்கும் குரும்பர் இன மக்கள் இந்நடுகற்களை தெய்வங்களாக வழிபடுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>