கிருஷ்ணகிரி அருகே 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம், பல வரலாற்று தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. வேப்பனஹள்ளி அருகே உள்ள பந்திகுறி பகுதியில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடித்துள்ளனர்.

பந்திகுறி கிராமத்திற்கு மேற்கே, தனியார் நிலத்தில் உள்ள பாறையில் 10 வரிகளை கொண்ட இந்த நீண்ட கல்வெட்டு காணப்படுகிறது. வீரவல்லாளனின் மகன் விருதுகோவன் இலக்குமி நாயக்கர், இப்பகுதியை ஆண்டபோது, அவரது ஆட்சி சிறக்க வேண்டி, குந்தாணி என்னுமிடத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலுக்கு, பந்திகுறியில் உள்ள நிலத்தை தானமாக அளித்த செய்தியை, இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு இரண்டு முக்கிய வரலாற்று செய்திகளை நமக்கு உணர்த்துகிறது. முதலாவதாக சுமார் 700 ஆண்டுக்கு முன்னர், பந்திகுறி என்று தற்போது அழைக்கப்படும் இந்த ஊர் பன்றிகுறுக்கி என்ற அழைக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

மேலும், ஒய்சாள மன்னன் வீரவல்லாளனின் பெயர் இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் வீரவல்லாளன் கி.பி.1343 ல் கொல்லப்பட்டதாகவும், அதன் பின்பு அவனது மகன் 3 ஆண்டுகள் அரசாண்டதாகவும் வரலாறு கூறுகிறது. அவனுக்கு பின்பு விஜயநகர அரசோடு இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், கி.பி.1368ம் ஆண்டை சேர்ந்த பன்றிகுறி கல்வெட்டு, வீரவல்லாளனின் மகன் பெயர் விருதுகோவன் இலக்குமி நாயக்கர் என்றும், இவனது வாளும், தோளும் நன்றாக இருக்க வேண்டி, தானம் அளித்த செய்தியை குறிப்பிடுகிறது. எனவே, இக்கல்வெட்டு வாயிலாக ஒய்சாள வம்சமானது முடிவுற்ற பின்னும், தொடர்ந்து குறுநிலத் தலைவர்களாக விஜயநகரர் ஆட்சி காலத்திலும் இப்பகுதியை ஆண்டு வந்துள்ளது தெரிய வருகிறது.

மேலும், வீரவல்லாளன் என்ற பெயரில், சுமார் 150 ஆண்டுகள் கழித்து விஜயநகரப் பேரரசின் இறுதிக் காலத்தில், இப்பகுதியை ஆண்டதாக முறையே கி.பி.1505ம் ஆண்டை சேர்ந்த நெடுசால் கல்வெட்டு மற்றும் 1511ல் வெட்டப்பட்ட கொத்தூர் கல்வெட்டு ஆகிய இரண்டு கல்வெட்டுகளும் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மேலும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: