காளையார் கோவில் அருகே சுமார் 353 ஆண்டுகள் பழமையான வாமன உருவம் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

காளையார் கோவில் அருகே சுமார் 353 ஆண்டுகள் பழமையான வாமன உருவம் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

காளையார் கோவில் வட்டம் கொல்லங்குடியை அடுத்த வீரமுத்துப்பட்டி செங்குளி வயலில், பழமையான எழுத்துகள் உள்ள ஒரு கல்வெட்டு கண்டுபிடிப்பு. இதையடுத்து அங்கு சென்ற தொல்லியல் ஆய்வாளர்கள் களஆய்வு செய்தனர். அப்போது அங்கு இருந்த கற்கள் சுமார் 353 ஆண்டுகள் பழமையான வாமன உருவம் பொறித்த கல்வெட்டு என தெரிந்தது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது:- அந்த கல்லின் ஒரு பக்கத்தில் ஒருகையில் விரித்த குடை மற்றொரு கையில் கெண்டி எனும் கமண்டலம் உள்ளது. மேலும் மண்டையின் பின்பகுதியில் கொண்டையும், மார்பில் முப்புரி நூலுடன் வாமன உருவம் காணப்படுகிறது. அரசர்கள் ஆண்ட காலத்தில் நிலம் தொடர்பான ஆவணங்கள் வழங்கும் போது, இறைவனுக்கானது என்பதை அடையாளப்படுத்துவதற்காக வடிக்கப்பெற்றுள்ளது.

கல்வெட்டு கல்லின் இரண்டு பக்கங்களிலும் கல்வெட்டு எழுத்து காணப்படுகிறது. அதில் முதல் பக்கத்தில் 16 வரிகள் உள்ளன. அதில் இஸ்வஸ்தி ஸ்ரீசகாத்தம் 1588 பிங்களஆண்டு கார்த்திகை 2-ல் வரணையில் கீழசெங்குளி, மேலசெங்குளி, முனிபட்டையருக்குலடி ஊருணிக்குமேற்கு செவுரிக்கு வடக்கு கண்டி அய்யனுக்கு கிழக்கு பசுகெடைப் பொட்டலுக்குத் தெற்கு ஸ்ரீதி (இதில் 6, 7, 8-ம்வரிகளில் இறுதி எழுத்துகள் சிதைந்துள்ளன).

இரண்டாம் பக்கத்தில் 6 வரிகள் உள்ளன. அதில், திருமலை சேதுபதி காத்த தேவர்க்குகானம் காளிசுரர உடையாருக்கு இட்ட பிரமதாயம்.உ என்று உள்ளது. ராமநாதபுரம் ரகுநாதசேதுபதி என்ற திருமலைசேதுபதி, காளையார்கோவில் காளஸ்வரருக்கு வழங்கிய நிலம் குறித்த பிரமதாயமாக இருக்கலாம்.

இதன் எல்லை கீழசெங்குளி, மேலசெங்குளி முனிபட்டையருக்கு அடிஊருணிக்கு மேற்கு, செவுரிக்கண்மாய்க்கு வடக்குகண்டிப்பட்டி அய்யனாருக்கு கிழக்கு, பசுகெடைப்பொட்டலுக்கு தெற்கு. இதில் காட்டப்பட்டுள்ள ஊருணி தற்போது காணப்படவில்லை. மற்றவை மாறுபாடில்லாமல் உள்ளன.

ரகுநாதசேதுபதி 1645 முதல் 1676 வரை ஆட்சி செய்துள்ளார். இவர் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுள் புகழ்பெற்ற கிழவன் சேதுபதிக்கு முந்தைய மன்னராவார். இவர் மதுரையை ஆண்ட திருமலைநாயக்கரிடம் இணக்கமாக இருந்ததோடு போர் உதவிகள் புரிந்துள்ளார். ஆகவே இவர் திருமலை சேதுபதி என அழைக்கப் பெற்றுள்ளார்.

அரசர்கள் பொதுவாக ஆவணங்கள் வழங்கும் போது கல்லிலும், செம்பிலும் வெட்டி கொடுப்பது மரபு. இதுதொடர்பான செப்பேடு கிடைத்ததாக தெரியவில்லை. இனிவரும் காலங்களில் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: