சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே சூரப்பள்ளிநைனானூரில் சேலம் வரலாற்று தேடல் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி வரலாற்று தேடல் ஆர்வலர் சீனிவாசன், ”சேலம் மாவட்டம் நங்கவள்ளி சூரப்பள்ளிநைனானூரைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் கொடுத்த தகவலின் பேரில் அந்தக் கிராமத்துக்குச் சென்று பார்த்தபோது தனியாருக்குச் சொந்தமான ஒரு தோட்டத்தில் செங்குத்தான நடுகல் இருந்தது. இந்த நடுகல்லை ஆய்வு செய்து பார்த்ததில் பெருங்கற்கால ஈமச் சின்னம் என்பதை அறிந்து கொண்டோம்.
உலகத் தமிழர் பேரவை-யில் உறுப்பினராக….. இங்கு அழுத்தவும்
பெருங்கற்காலம் என்பது சங்க இலக்கிய காலங்களுக்கு முற்பட்ட சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் இறந்தவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் பெரிய பெரிய கற்களைக் கொண்டு நினைவுச் சின்னம் எழுப்புவார்கள். இந்தக் காலத்தைப் பெருங்கற்காலம் என்று வரலாற்று ரீதியாக அழைக்கிறோம். அந்த வகையில் பெருங்கற்கால ஈமச் சின்னமாகத் திகழும் இந்த நடுகல் 3,000 ஆண்டு பழைமை வாய்ந்தது. தற்போது இந்த நடுகல் 10 அடி உயரத்திலும், 6 அடி அகலத்திலும் இருக்கிறது. ஆனால், இந்தக் கல் 15 முதல் 20 அடி உயரம் இருந்திருக்கலாம். காலப்போக்கில் இது உடைந்துவிட்டது. கல் உடைந்ததற்கான அடையாளங்கள் இருக்கிறது.
அந்தப் பெருங்கற்கால சின்னம் இருக்கும் நிலத்தின் உரிமையாளர்களிடம் விசாரித்தபோது, ”இந்தக் கல் காலம்காலமாக இருந்து வருகிறது. நாங்களும் இந்தக் கல்லை சாமியாக நினைத்து வழிபட்டு வருகிறோம். குறிப்பாக, பொங்கல் தினத்தில் முன்னோருக்கு வழிபாடு செய்யும் நாளில் இந்தக் கல்லுக்கு பூஜை செய்து வணங்கி வருகிறோம்” என்றார்கள். இந்தக் கல் நம் மூதாதையர் வழிபாட்டு அடையாளமாகவும் இருந்து வருகிறது. அரசு தொல்லியல் துறை மூலம் அடையாளம் கண்டு இந்தப் பெருங்கற்கால அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.