திண்டுக்கல் அருகே 2,500 ஆண்டுகள் பழமையான சங்க கால கோட்டை, முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

திண்டுக்கல் அருகே 2,500 ஆண்டுகள் பழமையான சங்க கால கோட்டை, முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

திண்டுக்கல் அருகே 2,500 ஆண்டுகள் பழமையான சங்க கால கோட்டை, முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

திண்டுக்கல் மாவட்டம், பாடியூரில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத்தை சேர்ந்த சிதைந்து போன கோட்டை, முதுமக்கள் தாழி உள்ளிட்ட பழங்கால பொருட்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இவ்வூரில் தரைமட்டத்தில் இருந்து 30 அடி உயரமுள்ள ஐந்துஏக்கர் பரப்பிலான மண் மேடு உள்ளது. இதில் ஒரு பகுதியில் சிதைக்கப்பட்டு பள்ளி கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த தொல்லியல் ஆய்வாளர்கள் நாராயண மூர்த்தி, பழநியாண்டவர் கலைக்கல்லுாரி பேராசியர்கள் ராஜா, மனோகரன், அசோகன், ஆய்வு மாணவர்கள் வீர கருப்பையா, சேரன் பொழிலான் ஆகியோர் பாடியூரில் ஆய்வு செய்தனர்.

இதில் அரிதான பொருட்கள், சிதைக்கப்பட்ட மண் மேடுகளில் இருந்து பழங்கால மக்கள் பயன்படுத்திய கறுப்பு சிவப்பு நிறங்களிலான மட்பாண்ட ஓடுகள், முதுமக்கள் தாழி, அதற்குள் எலும்புகள், சிறுவர்கள் விளையாட கூடிய பொம்மை சக்கரம், காதணிகள், சுடுமண், சிற்பங்கள், அகல் விளக்கு போன்ற சிதைந்த அரிய பொருட்கள் கிடைத்தன.

பாடியூரில் சிதிலமடைந்த மண்மேட்டை இப்பகுதியினர் கோட்டை என்று அழைக்கின்றனர். இது 19ம் நுாற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில் ‘நரிமேடு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நரிகளின் வசிப்பிடமாக இருந்துள்ளதால் 200 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி இருந்துள்ளது.

இக்கோட்டை மேட்டில் மேற்கொண்ட ஆய்வில் சங்க கால மக்கள் பயன்படுத்திய மண் பாண்டங்கள் ஏராளமாக உள்ளது தெரிய வந்தது. நகக்குறி ஓடுகள், திருகு கல், அகல் விளக்கு உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இங்கு 2,500 ஆண்டுகளுக்கு முன் மக்கள் வசித்திருக்கலாம். சங்க இலக்கியத்தில் ‘பாடி’ என்றால் படைவீரர்கள் வசிக்கும் பகுதியை குறிக்கும். பாடியூரை சுற்றி தாமரைப்பாடி, முள்ளிப்பாடி, சீலப்பாடி, மேலப்பாடியூர் போன்ற ஊர்கள் இருப்பதால் சங்க காலத்தில் போர் வீரர்கள் தங்கி போர் புரிந்து இருக்கலாம், என தெரிய வருகிறது.

இந்த இடத்தில் 3 ஏக்கர் பரப்பிலான மேடு அழியாமல் உள்ளது. முறையான அகழாய்வு நடத்தினால் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வாழ்ந்த நாகரீகத்தை அறிய உதவும். அழகன்குளம், பொருந்தல், கொடுமணல் ஆகிய இடங்களில் நடந்த அகழவாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் போன்று பாடியூரில் நிறைய சங்ககால பொருட்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் புதைகுழிகள் நிறைய கிடைக்கும். ஆனால் கோட்டைகள் கிடைப்பது அரிதானது. தமிழக மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், எப்படி மறைந்தார்கள், நமக்கு என்ன விட்டுச் சென்றனர் என்பதை அறிய முடியும். இவ்வாறு தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: