கல்வராயன் மலையில், சோழர் கால காட்டு பன்றி குத்திபட்டான் சதிகல், புதிய கற்கால கருவி, கற்திட்டை மற்றும் குத்து கற்களை கண்டெடுப்பு!

அத்திரிப்பட்டி பிள்ளையார் கோயிலில் கண்டறியப்பட்ட புதிய கற்கால கருவிகள்.

அத்திரிப்பட்டி பிள்ளையார் கோயிலில் கண்டறியப்பட்ட புதிய கற்கால கருவிகள்.

சேலம் மாவட்டம், கல்வராயன் மலையில் சோழர் கால காட்டுப் பன்றி குத்திபட்டான் சதிக்கல், புதிய கற்காலக் கருவிகள், கற் திட்டைகள் மற்றும் குத்துக் கற்கள் ஆகியவற்றை சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் வட்டம், கல்வராயன் மலைப் பகுதியில் அருணா, அத்திரிப்பட்டி கிராமங்களில், சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஆறகழூர் பொன்.வெங்கடேசன், ஆசிரியர்கள் பெருமாள், கலைச்செல்வன், மருத்துவர்கள் அருண்குமார் பங்கஜ், பொன்னம்பலம் மற்றும் மன்னன், சீனிவாசன், ஜீவநாராயணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

கணவன் இறந்து விட்டால் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம், பழங்காலத்திலேயே சேலம் மாவட்டத்திலும் இருந்துள்ளது. விளைந்த பயிர்களை நாசம் செய்த காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய போது, வீரன் ஒருவன் இறந்துள்ளான். அதில் மனமுடைந்த அவனது மனைவியும் அவனோடு உடன்கட்டையேறி இறந்துள்ளார். அவர்களது நினைவாக, அருணா கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர் கால காட்டுப்பன்றி குத்திபட்டான் சதிக்கல் ஒன்றை, ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

அந்த சதிக் கல்வெட்டில், நீண்ட வில்லுடன் காட்டுப் பன்றியின் மீது அம்பு விடும் வீரனின் தலையில், வலது பக்கம் குவித்த கொண்டையில் இறகு அலங்காரமும், காதணி அற்ற நீண்ட காதும், கழுத்தை ஒட்டி மணி ஆபரணமும் காட்டப்பட்டுள்ளன. குறுவாளுடன் கூடிய அரைக் கச்சை ஆடையும், கையில் வளையமும், கீழ்நோக்கி பாயும் நிலையில் அம்பும் உள்ளது. வீரனை விட உயரம் குறைந்த காதணி அணிந்த பெண், மேலாடையின்றி இடையில் அரையாடையுடன் காலில் தண்டையும், கையில் வளையமும் அணிந்தவாறு செதுக்கப்பட்டுள்ளது.

கல்வராயன் மலை கருமந்துறை அருகே அத்திரிப்பட்டி கிராம பிள்ளையார் கோயிலில் 6,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட 70-க்கும் மேற்பட்ட பல்வேறு வடிவ புதிய கற்கால கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. உணவுக்காக விலங்குகளை வேட்டையாடவும், கொட்டைகளை உடைக்கவும் இக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்து வந்திருப்பது புலனாகிறது. இந்த ஊருக்கு அருகே உள்ள நாட்டம் பாறை என்ற இடத்தில் ஐந்து கற்திட்டைகள் உள்ளன. 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள், தன் குழுவில் இறந்த முக்கியமான தலைவர்களுக்கு இதுபோன்று கற் திட்டைகளை அமைத்து வழிபட்டு வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: