கீழடி அகழாய்வு பணிக்கு 22 ஏக்கர் நிலம் கொடுத்த சகோதரிகள்!

கீழடி அகழாய்வு பணிக்கு 22 ஏக்கர் நிலம் கொடுத்த சகோதரிகள்!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொல்லியல் துறையினர் அகழாய்வு நடத்தி வருகின்றனர். நான்காம் கட்ட அகழாய்வுப் பணி முடிந்த நிலையில், கீழடியில் பழந்தமிழர் பயன்படுத்திய அரிய வகை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து ஐந்தாம் கட்ட அகழாய்வு பணி ஜூன் மாதம் தொடங்கியது. இதற்காக கீழடியில் தேர்வு செய்யப்பட்ட 110 ஏக்கரில் 10 ஏக்கரில் மட்டும் அகழாய்வு பணி மும்முரமாக நடைபெற்றது. இந்த ஆய்வின் போது அணிகலன்கள், பானை ஓடுகள், சுடுமண் சிற்பம், இரும்பு-செப்பு பொருட்கள் என 1000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. அதே போல் பழந்தமிழர் வாழ்வியலை அறியும் வகையில் இரட்டை வட்டச்சுவர், தண்ணீர் தொட்டி, உறைகிணறு, கால்வாய் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன.

கீழடியில் கிடைத்த பொருட்களின் காலம், தன்மை குறித்து அறிய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி பழமையான பொருட்களை ஆய்வு செய்ததில் அவை 2,600 ஆண்டுகள் பழமையானது எனவும், சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையான அல்லது அதற்கு முந்தைய நாகரிகம் கொண்டதாக கீழடி நாகரிகம் விளங்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அகழாய்வு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட 110 ஏக்கரில் வெறும் 10 ஏக்கரில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக தகவல் கிடைத்த நிலையில் எஞ்சியுள்ள பகுதிகளையும் ஆய்வு நடத்தினால் தமிழர்களின் முதன்மையான வாழ்க்கை முறை, அவர்கள் வாழ்ந்த காலம் குறித்த தகவல்கள் வெளிவரலாம். எனவே 6-வது கட்ட அகழாய்வு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளது.

கீழடியில் பழந்தமிழர்கள் வாழ்ந்திருப்பது அந்தப்பகுதி மக்களிடையே பெருமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அகழாய்வு மேற்கொள்வதற்காக கீழடியை சேர்ந்த நீதியம்மாள், மாரியம்மாள் சகோதரிகள் தங்களுடைய 22 ஏக்கர் நிலத்தை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து உள்ளனர்.

இது பற்றி அவர்கள் கூறுகையில், அகழாய்வு செய்வதற்காக எங்களது 22 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளோம். அவற்றில் முழுமையாக ஆய்வு செய்தால் இன்னும் பொருட்கள் கிடைக்கும். பழந்தமிழர்கள் எங்கள் பகுதியில் வாழ்ந்திருப்பதை நினைத்தால் பெருமையாக உள்ளது. இதன் மூலம் எங்கள் ஊர் உலகத்திற்கே தெரிய வந்துள்ளது என்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: