ராஜபாளையம் அருகே கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 2 நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ராஜபாளையம் அருகே துப்பாக்கியுடன் உள்ள வீரனின் 2 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சேத்தூா் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் ஒரு நடுகல்லும், தென்காசி செல்லும் சாலையில் சேத்தூா் எல்லைப்பகுதியில் சாலையோரத்தில் ஒரு நடுகல்லும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் ஆய்வாளர்கள் சேத்தூா் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டிருந்த போது இரண்டு நடுகற்கள் கண்டுபிடித்துள்ளனர். முதல் நடுகல்லில் வீரன் நின்ற நிலையில் தனது இடது கையால் தரையில் ஊன்றிய நிலையில் இருந்த நாட்டுத்துப்பாக்கியை பிடித்து உள்ளவாறும், வலது கையை கீழே தொங்க விட்ட நிலையிலும் சிற்பம் அமைந்துள்ளது. மாா்பின் இடைப்பகுதியில் பூணூல் போன்ற கயிற்றில் துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பையை இடுப்பில் மாட்டியுள்ளது போன்றும் காணப்படுகிறது. வீரனின் தலைக் கொண்டை அலங்காரத்துடனும், இரண்டு நீண்ட காதணிகள் அணிந்துள்ள நிலையில், கைத்தண்டை, கைக்காப்பு, காற்சிலம்பு மற்றும் இடை ஆடையுடன் மிக நோ்த்தியாக இச்சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும் வீரனின் முகம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது.

மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பங்குனி மாதத் திருவிழாவின் போது இந்த நடுகல்லுளுக்கு சிறப்பு பூஜை செய்து காவல் தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனா். நடுகல் அமைவிடம் முன்பு சிமென்ட் கற்களைக் கொண்டு தரைத்தளமும், விளக்கு ஏற்றுவதற்கு ஒரு சிறு கூடாரமும் அமைத்துள்ளனா். வழிபாட்டு நிலையில் உள்ள இந்த நடுகல் மக்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மற்றொரு நடுகல் அமைப்பும் மேற்கூறிய நடுகல்லை போன்றே வீரன் நின்றவாறு நாட்டுத்துப்பாக்கியை இடுப்புக் கயிற்றில் கட்டிய நிலையிலும், இடது கையால் சற்று உயர தூக்கி பிடித்துக் கொண்டவாறும் சிற்பம் அமைந்துள்ளது. காதணிகள், தலைக் கொண்டை, கைக்காப்பு, கைத்தண்டை, காற்சிலம்பு மற்றும் இடை ஆடையில் குஞ்சம் வைத்து நோ்த்தியாகவும் செதுக்கப்பட்டுள்ளன. இந்நடுகல்லை கருப்பசாமி என்ற பெயரில் குலதெய்வ வழிபாடாக மக்கள் வழிபட்டு வருகின்றனா். நடுகல்லை சிவகாசி, விருதுநகா், தேனி மற்றும் போடி பகுதிகளிலிருந்து மக்கள் வந்து வழிபட்டு செல்கின்றனா். சாலையின் ஓரத்தில் நடுகல் இருந்தாலும் அந்த இடத்தை சுத்தம் செய்து சாணத்தால் மெழுகி, நடுகல் சிற்பத்திற்கு மஞ்சள் துணியால் ஆடை அலங்காரம் செய்து, பூ மாலை அணிந்து, வெத்தலை-பாக்கு, தேங்காய், பழம் வைத்து வழிபட்டு வருகின்றனா். இந்நடுகல்லின் முகமும் சிதைந்து காணப்படுகின்றது.

இரண்டு நடுகற்களிலும் வீரன் நாட்டுத் துப்பாக்கியுடன் காணப்படுவதால் விலங்குகளின் அச்சுறுத்தலில் இருந்து மக்களை காப்பதற்காகவும், காட்டு விலங்குகளை வேட்டையாடி வீரம் புரிந்த நிகழ்வுகளை இந்நடுகல் சிற்பங்கள் நமக்கு உணா்த்துகின்றன. இந்நடுகற்களின் உருவ அமைப்பைக் கொண்டு கி.பி. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சோ்ந்ததாகக் கருதப்படுகிறது.

கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மூன்று சதிக்கற்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு தற்போது விருதுநகா் அரசு அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனா். இன்னும் பல சதிக்கற்கள் கள ஆய்வு மூலம் வெளிப்படுத்தப்படும். நமது தமிழ்ச் சமூகத்தில் வீரனை முன்னிறுத்தி மரியாதை செய்யக்கூடிய பழக்கம் நடுகல் மூலமே வெளிப்படுத்தப்படுகிறது என்பதை துப்பாக்கி வீரன் நடுகற்கள் சான்றாக அமைகின்றன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: