நங்கவள்ளி அருகே 16ம் நூற்றாண்டு புலிகுத்தி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் நங்கவள்ளியிலிருந்து, மேட்டூர் செல்லும் சாலையில் வீரக்கல் என்னும் ஊரில் (ட்ரான்ஸ்பார்ம் வழி) சலபெருமாள் கோயில் உள்ளது. நங்கவள்ளி வரலாற்றுச் சங்கத்தை சேர்ந்த பழனிசாமி, அச்சமில்லை பழனிசாமி, அர்த்தனாரி, நங்கவள்ளி கவிஞர் ஓமலூர் சீனிவாசன், ஆசிரியர் கலைச்செல்வன் ஆகியோர், இக்கோயிலில் புலிகுத்தி நடுகல் இருப்பதை கண்டறிந்தனர். வீரர்களுக்கு நடுகல் (வீரக்கல்) நடும் வழக்கம் சங்க காலம் முதல் இருந்து வருகிறது. போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கும், கொடிய விலங்குகளிடமிருந்து மக்களை காத்திட விலங்குகளுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்தவர்களுக்கும், அவர்களை புதைத்த இடத்தில் உருவம் பொறித்த கல்லை நடுவது நடுகல் அல்லது வீரக்கல் என்று பெயர்.
இதையொட்டி, சல பெருமாள் கோயிலில் உள்ள புலிகுத்தி நடுக்கல் 16ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம். அக்காலத்தில் நங்கவள்ளி பகுதி காடுகள் சூழ்ந்த வனமாக இருந்துள்ளது. மேலும் அருகில் வனவாசி மலையும் காணப்படுவதால், இப்பகுதியில் அதிகளவில் புலிகள் நடமாட்டம் இருந்திருக்கும். இப்பகுதியை சேர்ந்த வீரன் ஒருவன் மக்களைக் காக்கும் பொருட்டு, புலியுடன் சண்டையிட்டு இறந்துள்ளான். அவனது வீரத்தை போற்றும் விதமாக அவனை அடக்கம் செய்த இடத்தில், புலியைக் குத்தும் வீரன் உருவத்தை கல்லில் பொறித்து நட்டுள்ளனர். நடுகல்லில் சில இடங்களில் உடைந்த நிலையில் உள்ளது. வீரன் வலது கையால் கட்டாரி என்னும் ஆயுதத்தை கொண்டு, புலியின் மார்பில் குத்துவது போல் உள்ளது. தலையில் கிரீடமும், காதுகளில் காதணிகள் அணிந்தும், இடுப்பில் அரையாடையும், கால்களில் வீரகழல் அணிந்தும், வீரன் இருப்பதால் இப்பகுதியின் அரசனாகவோ அல்லது மக்கள் தலைவனாகவோ கருதலாம்.
நடுகல்லானது மண்ணின் மேல்பகுதியில் இருந்து உயரம் 59 செ.மீ, அகலம் 52 செ.மீ, கல்லின் தடிமன் 27 செ.மீ அளவுகள் கொண்டு உள்ளது. இதே போல், செல்லக்கல்லுத்திட்டு என்னும் பகுதியில் ஒரு புலிகுத்தி நடுகல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இவ்வூருக்கு வீரக்கல் (நடுகல்) என்ற பெயரிலேயே ஊர்பெயர் அமைந்துள்ளது சிறப்புக்குரியதாகும். சல பெருமாள் கோயிலில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கருவறை மட்டுமே கற்களால் கட்டப்பட்ட கற்றளி கோயிலாகும். அக்காலத்தில் இங்கு தண்ணீர் (ஊற்று) ஊறிக்கொண்டே இருந்துள்ளது. இந்நிலையில், தண்ணீரில் சாமி (பெருமாள்) கல்சிலை தோன்றியதால் சல பெருமாள் என்று பெயர் வந்தது. இதை கதிராய பெருமாள் கோயில் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. மண்ணின் நில மட்டத்திற்கு ஆறு அடிக்கு கீழே தான் கோயில் உள்ளது. அமாவாசை, சனிக்கிழமை மற்றும் புரட்டாசி மாதம் போன்ற காலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.