தலைவாசல் அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!

தலைவாசல் அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!

தலைவாசல் அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!

தலைவாசல் அருகே, 12ம் நூற்றாண்டை சேர்ந்த 2 நடுகற்களை வரலாற்று மையத்தை சேர்ந்தவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி கிராமத்தில், சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், தெற்குமேடு என்ற பகுதியில், ராமசாமி என்பவரது தோட்டத்தின் அருகே ஏரிவாய்க்கால் கரையோரத்தின் ஒரே இடத்தில் 2 நடுகற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நடுகற்களில் இடதுபுறம் உள்ள நடுகல் 75 செ.மீ உயரமும், 55 செ.மீ அகலம் 12 செ.மீ தடுமனும் உள்ள ஒரு பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இடதுபுறம் சாய்ந்த கொண்டையானது அள்ளி முடிக்கப்பட்டு, முடிச்சு பறக்கும் நிலையில் உள்ளது.

காதுகளில் காதணி, கழுத்தில் சரபளி சவடி போன்ற ஆபரணங்களும், மார்பில் சன்னவீரம் எனப்படும் வீரச்சங்கிலியும் காணப்படுகிறது. சன்னவீரம் என்பது போருக்கு போகும் வீரர்கள் அணிவதாகும். முதுகில் அம்புக்கூட்டில் 4 அம்புகள் உள்ளன. வீரனின் இடது கை நீண்ட வில்லினை பற்றியுள்ளது. வலது கையில் அம்பும், இடைக்கட்டு மூன்று வரிகளில் உள்ளது. அரையாடையின் முடிச்சு நீண்டு வில் வரை உள்ளது. வீரனின் வலது பக்க இடுப்பில் குறுவாள் உள்ளது. பாதமானது பூமிக்கடியில் புதைந்துள்ளது. மிகவும் அலங்காரமான நிலையில் வீரக்கல் காட்டப்பட்டுள்ளது. இது இந்த பகுதியில் நடந்த போரின்போது இறந்த வீரனுக்கு வைக்கப்பட்ட நடுகல்லாகும். 12ம் நூற்றாண்டில் வாணகோவரையர் என்பவர்கள் ஆறகளூரை தலை நகராக கொண்டு மகதை நாட்டை ஆண்டனர். தேவியாக்குறிச்சி என்ற இந்த ஊர் தேவியர் குறிச்சி என்ற பெயரில் ஆறுகளூரின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.

ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோயிலில் பணிபுரிந்த தேவரடியார்களுக்கு தேவியாகுறிச்சியில் நிலம் தானமாக தரப்பட்டுள்ளது. வாணகோவரையர் ஆட்சியின் போது ஹொய்சாளர்கள், பாண்டியர்கள் விஜயநகர பேரரசர்கள் போன்றோருடன் போரில் ஈடுபட்டு இறந்த ஒரு வீரன் நினைவாக வைக்கப்பட்டுள்ள வீரக்கல் இதுவாகும். இது 12ம் நூற்றாண்டை சேர்ந்தது என கருதலாம். அதிக அலங்காரம் இல்லாமல் எளிமையாக வீரக்கல் காட்டப்பட்டுள்ளது. மகத நாட்டை ஆண்ட வாணகோவரையர்கள் சார்பாக போரிட்டு வீர மரணமடைந்த வீரன் நினைவாக வைக்கப்பட்டுள்ள வீரக்கல்லாகும். இப்பகுதியில் இன்னும் ஆய்வுகள் மேற்கொண்டால் பல வரலாற்று நினைவு சான்றுகள் கிடைக்கலாம் என வரலாற்று ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: