விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண்டுகள் பழைமையான சிற்பம் கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண்டுகள் பழைமையான சிற்பம் கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண்டுகள் பழைமையான சிற்பம் கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம் ஈயனூர் என்ற கிராமத்தில் 1200 ஆண்டு கால பழைமையான பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.

சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன் ஆகியோர் அடங்கிய குழு ஈயனூர் கிராமத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் ‘பழையோள், காணாமற் செல்வி’ என்று கொற்றவை குறிப்பிடப்படுகிறாள். இளங்கோவடிகள் மதுரை காண்டத்தின் இரண்டாவது காதையான வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு குறித்தும், கொற்றவை உருவம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்திருக்கிறார். கானகத்தில் வசிக்கும் வேட்டுவர்கள் தமக்கு வேட்டையில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கொற்றவையை வழிபட்டுள்ளனர். ‘பாய்கலைப்பாவை’ என்றும் கொற்றவை அழைக்கப்பட்டிருக்கிறாள். மன்னர்கள் போருக்குச் செல்லும் முன் கொற்றவையை வணங்கி நவகண்டம் கொடுத்துச் சென்றால் வெற்றி கிடைக்கும் என நம்பினர். கொற்றவை பாலை நிலத்துக்கு உரிய கடவுளாக இலக்கியங்கள் கூறுகின்றன. சில நூல்கள் குறிஞ்சி நிலத்துக்கு உரிய கடவுளாகவும் குறிப்பிடுகின்றன. பிற்காலங்களில் துர்க்கை என்ற பெயரில் கொற்றவை வழிபாடு மாற்றமடைந்தது.

ஈயனூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் பின்புறமுள்ள காளிக் கோயிலில் இந்தக் கொற்றவை சிற்பம் உள்ளது. சில நூறு ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்டு இருந்த இந்தச் சிற்பத்தை மக்கள் மீட்டெடுத்து தற்போது வழிபாட்டில் வைத்துள்ளனர். ஒரு பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 120 செ.மீ, அகலம் 105 செ.மீ, தடிமன் 10 செ.மீ ஆகும். கொற்றவை நேராக நின்ற நிலையில் இருக்கிறாள். தலையில் கரண்ட மகுடம், காதுகளில் பனைஓலை, கழுத்தில் சவடி, சரபளி அணிகலன்கள், மார்பில் சன்னவீரத்துடன் காணப்படுகிறாள். மார்புக்கச்சை தோள்பட்டையுடன் காட்டப்பட்டுள்ளது. பின்புறம் சூலாயுதம் இருக்கிறது. இடதுபுறம் கலைமான் வாகனமாகக் காட்டப்பட்டுள்ளது. எட்டுக் கரங்களுடன் காட்சியளிக்கிறாள் கொற்றவை. இடது பின் கரங்களில் சங்கு, வில், கேடயமும், இடது முன் கரம் கடியஸ்த நிலையிலும் உள்ளது. வலது பின்கரங்களில் எறிநிலைசக்கரம், வாள், மணி காட்டப்பட்டுள்ளது. வலது முன் கரம் அபய முத்திரையில் உள்ளது. கைகளில் வளையல் உள்ளது. வலது கை அருகே கிளியும் இடது புறம் சிங்கமும் காட்டப்பட்டுள்ளது. யானையின் தோலை இடுப்பில் கட்டி, அதன் மேல் சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்திருக்கிறாள்.

கொற்றவையின் கால் அருகே தன் தலையைத் தானே அரிந்து பலியிட்டுக்கொள்ளும் நவகண்டவீரன் ஒருவன் இருக்கிறான். இடது பக்கம் வணங்கிய நிலையில் அடியார் ஒருவர் இருக்கிறார். கால்களில் கழலும், சிலம்பும் உள்ளது. காலடியில் எருமையின் தலை காட்டப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் கொற்றவையின் அமைப்பை ஒத்த நிலையில் இந்தக் கொற்றவை சிற்பம் அமைந்துள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: