உத்திரமேரூரில் அருகே, 1200 ஆண்டுகள் பழைமையான பல்லவர்கால சிலைகள் கண்டுபிடிப்பு!

உத்திரமேரூரில் அருகே, 1200 ஆண்டுகள் பழைமையான பல்லவர்கால சிலைகள் கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பல்லவர், சோழர் கால கல்வெட்டுகளும், கற்சிலைகளும் ஆங்காங்கே கிடைத்து வருகின்றன. மேலும் இப்பகுதியில் கிடைக்கும் கல்வெட்டுகளையும், கற்சிலைகளையும் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர், தொல்லியல் துறை அதிகாரிகளின் உதவியோடு ஆவணப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், உத்திரமேரூர் அருகே உள்ள காவனூர்புதுச்சேரி கிராமத்தில் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை தேவி சிலை மற்றும் ஐயனார் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொற்றவை என்பது ஆதித்தமிழரின் முதல் தெய்வமாகும். போருக்குச் செல்லும் மன்னர்கள் கொற்றவைக்கு விழா எடுத்து வணங்கிவிட்டுச் செல்வது வழக்கம். படைவீரனில் ஒரு சிறந்த மறவனைத் தேர்வு செய்து கொற்றவை சிலைக்கு முன்பாக தன் தலையைத் தானே வாளால் வெட்டி பலிகொடுக்கும் அரிகண்டம் என்னும் சடங்கு நடைபெறும். காவனூர்புதுச்சேரி கிராமத்தில் கண்டெடுத்த சிலை பொன்னியம்மன் கோயில் அருகே வயல்வெளியில் முக்கியத்துவம் இன்றி உள்ளது. இக்கொற்றவையின் தலையில் கரண் மகுடனும், காதில் குழையும், கழுத்தில் அணிகலன், மார்பில் கச்சை, இடையில் அரையாடை, புஜங்களில் வாகு வளையங்கள், கால்களில் சிலம்புடன் எருமை தலைமீது நின்ற கோலத்தில் சிலை அமைந்துள்ளது. இடப்புற காலடியில் தன் தலையைத் தானே வாளால் அறுத்துப் பலிகொடுக்கும் அரிகண்ட சடங்கான தலைப்பலி வீரனின் சிலையும் செதுக்கப்பட்டுள்ளது.

அதுபோல் இப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் எதிரில் புளியமரத்தடியில் ஓர் ஐயனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. தென் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும் ஐயனாருக்கு அய்யன், சாத்தன், சாஸ்தா எனப் பல பெயர்கள் உண்டு. பொதுவாக ஐயனார் தனித்தே காணப்படுவார். பிற்காலங்களில் பூரணை, புஷ்கலை என்ற இரு மனைவிமார்கள் இணைந்ததாகக் காட்சியளிப்பார்கள். ஆனால், இந்தச் சிற்பத்தில் அவர் தலையின் மேற்புறம் இரு பெண்கள் வணங்கி வாழ்த்துவதாக அமைந்துள்ளது. இந்த ஐயனார் சிலை அரிதானதான ஒன்றாகும்.

மேலும், உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தின் கௌரவத் தலைவரும், தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியருமான மார்க்சியா காந்தி அவர்கள் இந்தச் சிலைகள் சுமார் 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என உறுதிப்படுத்தியுள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: