கல்வராயன் மலை, பெரிய குட்டிமடுவு கிராமத்தில், சோழர் கால சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக தொல்லியல் துறை, ஓய்வு பெற்ற இணை இயக்குனர் பூங்குன்றன், சேலம் வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, பெரிய குட்டிமடுவு கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். இங்கு, பொன்னுசாமி என்பவரது நிலத்தில், 11 மற்றும், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, சோழர் கால சிற்பங்களை கண்டுபிடித்தனர். 11ம் நுாற்றாண்டு நடுகல்லில் மட்டும் எழுத்துக்கள் உள்ளன.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
கடந்த, 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்த ஒரு நடுகல், 2 அடி உயரம், 1.5 அடி அகலத்தில், சிற்பம் உள்ளது. 27 வரிகளில் எழுத்துக்களில், மூன்று வரிகள் படிக்க முடியாத அளவுக்கு சிதைந்து உள்ளன.
மலையகுல சந்திராதித்த பேரரையன் என்ற தலைவன் காலத்தில், ஒரு வீரன் தன்னுடைய பகுதியை பாதுகாக்க, எதிரிகளுடன் போரிட்டு இறந்த செய்தியை இந்த கல்வெட்டு கூறுகிறது. மலையகுலம் என்பது சங்க காலம் முதலே, திருக்கோவிலுாரை தலைநகராக கொண்டு ஆண்ட மலைய மான்களை குறிப்பதாகும். தமிழகத்தில், சூரிய குலம், சந்திர குலம் என்ற இரண்டு பிரிவுகளாக, அரசர்கள் இருந்தனர். கல்வெட்டில் வரும், சந்திராதித்த பேரரையன், சூரிய குலத்தையும், சந்திர குலத்தையும் இணைத்து, ஒரு புதிய குலமாக உருவாகி இருக்கலாம். அதற்கு சான்றான இந்த கல்வெட்டு, தமிழக வரலாற்றுக்கு முக்கியமான ஒன்றாகும். ஈச்சம்பாடி, பரித்தியூர் என்ற ஊரின் பெயர்கள் உள்ளன. இந்த ஊர்கள், தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகாவில் இதே பெயரில் உள்ளன. மாவூர் என்ற ஊர் வரை சென்று, இவர்கள் போர் செய்துள்ளனர். இதில், கணியன் என்பவனின் மகன், சேனான் என்ற வீரன் இறந்துள்ளான். அவனுக்காக நடுகல் வைக்கப்பட்டுள்ளது.
சேனான் நடுகல்லுக்கு அருகில் உள்ள, 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சிற்பங்களில் எழுத்துக்கள் இல்லை. போருக்கு தயாராக செல்லும் வீரனின் இடுப்பில் ஒரு அம்பு பாய்ந்த நிலையில் உள்ளது. இடுப்பின் ஒருபுறம் சிறிய வாள் உள்ளது. இங்கு நடந்த போரில், எதிரிகளை கொன்று, வீரமரணம் அடைந்துள்ளான். இவனுக்காக வைக்கப்பட்ட சிற்பம் இது. இப்பகுதியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டால், பல்வேறு வரலாற்று தகவல்கள் கிடைக்கலாம். இவ்வாறு, வரலாற்று ஆய்வாளர்கள் கூறினர்.