கி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு!

கி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக இது போன்ற சிற்பங்கள், கல்வெட்டுகள், மன்னர் கால வாழ்விடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கலையூர் வில்லார் உடையார் ஐயனார் கோயிலில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த உடைந்த நிலையிலான சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட சிற்பம் 2 அடி உயரமும், 1½ அடி அகலமும் கொண்ட கருங்கல்லால் ஆனது. இச்சிற்பத்தில் அசோக மரத்தின் வளைந்த கிளைகளின் கீழ் பிரபாவளி என்னும் ஒளிவட்டம் உள்ளது. அசோக மரத்தின் கிளைகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. பிரபாவளியின் உள்ளே அமர்ந்த நிலையில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் இருந்திருக்க வேண்டும். தீர்த்தங்கரர் உருவம் இருந்த பகுதி முழுவதும் உடைத்து சிதைக்கப்பட்டுள்ளது.

இது சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரரான மகாவீரரின் சிற்பமாக இருக்கலாம். மேலும் இதன் காலம் கி.பி.10-ம் நூற்றாண்டாக கருதலாம். இக்கோவில் வளாகத்தில் மணற்பாறையில் செதுக்கப்பட்ட பூரணி, பொற்கலையுடன் காட்சி தரும் சிறிய அளவிலான அய்யனார் சிற்பம் ஒன்று மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளது. இது சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்.

திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டம், பொக்கனாரேந்தல் ஆகிய பகுதிகளிலும் இதுபோன்ற சமண தீர்த்தங்கரர்களின் உடைந்த சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் பொக்கனாரேந்தலில் உள்ள சிற்பம் மலைமேல் சாத்துடையார் என்ற அய்யனார் கோவில் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: