திண்டுக்கல் அருகே கிபி 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழந்தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திண்டுக்கல் அருகே பழந்தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திண்டுக்கல் அருகே, பண்டைய தமிழ் வட்டெழுத்துடன் கூடிய கல்வெட்டினை கண்டுபிடித்துள்ளனர்.

சித்தையன்கோட்டை அருகே நரசிங்கபுரம் எனும் கிராமத்திற்கு மேற்கே அமைந்துள்ள மலையடிவாரப் பகுதியில் கிபி 10-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட பண்டைக்கால தமிழ் வட்டெழுத்துடன் கூடிய உரல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சித்தையன்கோட்டை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த செக்கு உரல், பூமிக்கு அடியில் சுமார் 3 அடிக்கு கீழ் பாறையில் வெட்டப்பட்டுள்ளது. பண்டைக்கால தமிழான வட்ட எழுத்து வடிவில் மொழி கல்வெட்டாக வெட்டப்பட்டுள்ளது. இதில், ‘பர்முது நீர் முரிம் மரங்கரை யுகந்து தட்டான் ஆசிரியப்பாறை இதனைக்காப்பவன் செல்லக்கலிங்கரையன் மகன் யிட்ட செக்கு’ என குறிக்கப்பட்டுள்ளது.

‘முதுநீர் முரி நீ மங்கரை’ என்பது இந்த இடத்தை குறிக்கும் சொல்லாகும். ‘தட்டான்’ என்ற வார்த்தை பொற்கொல்லனை குறிக்கும். ‘ஆசிரியம்’ என்பது அடைக்கலம் கொடுக்கும் இடம் என்பதை குறிக்கும். எனவே, ஒரு பொற்கொல்லர் வேறு ஒரு இடத்திலிருந்து ஏதோ ஒரு காரணத்திற்காக இங்கு வந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களின் பாதுகாப்பிற்காக செல்லக்கலிங்கரையன் என்பவனின் மகனை நியமித்துள்ளார். செல்லக்கலிங்கரையன் மகன் இம்மக்களின் பயன்பாட்டிற்காக செக்கு உரல் ஒன்று வெட்டித் தந்துள்ளான் என்ற செய்தியை இந்த செக்கு உரலில் உள்ள எழுத்துக்கள் கூறுகின்றன. மேலும், இம்மலையை சுற்றி பண்டை காலத்தில் மக்கள் தனித்தனி கூட்டமாக ஆங்காங்கே வாழ்ந்து வந்ததையும், அடிக்கடி இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டபோது ஒரு கூட்டத்தினர் அடைக்கலம் தேடி வந்தது குறித்த செய்தியையும் கல்வெட்டு கூறுகிறது. இவை தவிர இப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பண்டைக்கால மக்களின் வாழ்விடங்கள், தொல்லியல் தடயங்கள், பாறை ஓவியங்கள், பானை ஓடுகள், வட்டெழுத்துக்கள் வெட்டப்பட்ட செக்கு உரல்கள் மற்றும் நடுகற்கள் போன்ற தொன்மையான வரலாற்றுத் தடயங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: