திருப்பத்தூர் அருகே 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வழிபாட்டு தெய்வங்களாக விளங்கும் இந்த கற்கள் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால சோழர்கள் கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கற்கள் எனப்படுகிறது.

பல்லவர் காலத்தில் சிறப்புடன் விளங்கிய 7 கன்னியர் வழிபாடு சோழர் காலத்திலும் தொடர்ந்தது. வட தமிழகப் பகுதிகளில் 7 கன்னிமார்கள் என்றும், கன்னிக்கோயில் என்றும் வழிபடுகின்றது. கி.பி.10ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டுள்ளதாக தெரிகிறது. இங்கு 3 நடுகற்கள், சிவபெருமான் சிலை ஒன்று கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த உடன்கட்டை நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. முதல் நடுகல்லானது 2.5 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. மேல்பகுதி கூர்மையாக அமைந்துள்ளது. நேராக இடப்பட்ட கொண்டையுடன் வீரர் உள்ளார். அவரது இடது கையில் வில், வலது கையில் குறுவாள் உள்ளது. வீரனின் வலது தோளின் பின்புறம் அம்புக்கூடு ஒன்று உள்ளது. 2-ம் நடுகல்லானது 3 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்டதாக உள்ளது.

வீரன் அழகான மேல் கொண்டையுடன் காணப்படுகிறார். அவரது இடது கையில் பெரிய வில் ஒன்றைத் தரையில் ஊன்றியபடி நிற்கிறார். வலது கையில் அம்பு உள்ளது. வலது தோளின் பின்புறம் அம்புக்கூடு ஒன்று உள்ளது. 3ம் நடுகல் உடன்கட்டை நடுகல் ஆகும். பொதுவாக உடன்கட்டை நடுகற்கள் நாயக்கர் காலத்தில் தான் அதிகமாக காணப்பட்டது. ஆனால் சோழர் காலத்தைச் சேர்ந்த உடன்கட்டை நடுகல் இங்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்த கல் 2 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் வீரன் உள்ளார். நேரிய கொண்டையுடன் காதுகளில் குண்டலங்களை வீரன் அணிந்துள்ளார்.

2 கைகளையும் வயிற்றுப்பகுதியில் வைத்துள்ளார். அந்த வீரரின் வலதுபக்கம் அவரது மனைவி உடன்கட்டை ஏறியுள்ள காட்சி இடம் பெற்றுள்ளது. இடது பக்கம் இவர்களை ஆசிர்வதிப்பது போல உருவம் ஒன்று உள்ளது. அதேபோல, சிவபெருமான் நெற்றிக்கண் மற்றும் நீண்டசடாமுடி அலங்காரத்துடன், இடது காலை மடக்கியபடி வலதுகாலை தொங்கவிட்டு, அமர்ந்த கோலத்தில் சிவபெருமான் உள்ளார். அவருக்கு 4 கைகள் காணப்படுகிறது. முன்வலது, இடது கைகளில் நீண்ட இசை கருவி ஒன்று உள்ளது. 2-வது வலது கையில் உடுக்கை ஒன்று உள்ளது. இது தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும். இது கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.

கி.பி 16-ம் நூற்றாண்டை சேர்ந்த உடன்கட்டை நடுகல் ஒன்று காணப்படுகிறது. இந்த நடுகல் 3.5 அடி உயரமும், 3.5 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. வீரன் நேரான கொண்டையுடன் காணப்படுகிறார். வலது கையில் நீண்டவாள் ஒன்றைத் தரையில் ஊன்றியபடி நிற்கிறார். இடையில் குறுவாள் ஒன்றும், காதுகளில் குண்டலங்கள் காணப்படுகின்றன. வீரனின் வலது பக்கம் உடன்கட்டை ஏறியதற்கான அடையாளத்தோடு பெண் ஒருவர் காணப்படுகிறார். இடது பக்கம், வாரி முடிக்கப்பட்டக் கொண்டையுடன் கையில் பை போன்ற முத்திரை ஒன்றும் காணப்படுகிறது.

பெண்ணின் வலது தோளில் கிளி ஒன்று அமர்ந்துள்ளது. இந்த இருவருக்கும் பின்னால் மாவிலை தோரணம் போலகாட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மாவீரன் பகைவரோடு ஏற்பட்ட போரில் உயிர்விட்டுள்ளார். இதனால், அவருடைய மனைவி உடன்கட்டை ஏறி உயிர்விட்ட செய்தி இந்த கல்லில் வெளியாகியுள்ளது. கி.பி.10-ம் நூற்றாண்டு முதல் கி.பி.16-ம் நூற்றாண்டு வரையிலான தமிழரின் வரலாற்றை இந்த நடுகல் எடுத்துரைப்பதாக இது கருதப்படுகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: