‘ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றை சுமந்தபடி, ராமநாதபுரம் மாவட்டத்தில் வாழும், பொந்தன் புளி மரங்களை பாதுகாக்க வேண்டும்’ என, தொல்லியல் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து, திருப்புல்லாணி தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை நீளமானது. அதனால், தொண்டி, அழகன்குளம், பெரியபட்டினம், கீழக்கரை, தீர்த்தாண்டதானம் உள்ளிட்ட பல, இயற்கை துறைமுகங்கள், சங்க காலத்திலேயே இருந்தன.
தப்பண்டசாலி, தோயாவத்திரச் செட்டிகள், தென்னிலங்கை வளஞ்சியர், கைக்கோளர், வாணியர் உள்ளிட்ட, பல வணிக குழுவினர் தங்கி இருந்ததை, தீர்த்தாண்டதான கோவில் கல்வெட்டு கூறுகிறது. அழகன்குளம், தொண்டி, பெரியபட்டினம் துறைமுகங்களுக்கு, ரோம், சீனா, அரேபிய நாட்டு வணிகர்கள் வந்ததை, அங்கு கிடைத்த அகழாய்வு பொருட்கள் நிரூபிக்கின்றன.
ஆப்ரிக்கா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, அரேபியா நாட்டு வணிகர்களும் இங்கு வந்துள்ளனர்; அங்கிருந்து, உயர்ரக குதிரைகளையும் இறக்குமதி செய்துள்ளனர். அந்நாடுகளில் வளரும் பொந்தன்புளி விதைகளை கொண்டு வந்து, இங்கு நட்டு வளர்த்து, அவற்றின் இலை, காய், கனிகளை குதிரைகளுக்கு, தீவனமாக கொடுத்துள்ளனர்.
பாண்டிய நாட்டில், ராமநாதபுரம் மாவட்டம், பெரியார் நகர், தேவிபட்டினம் உலகம்மன் கோவில், ராமேஸ்வரம், தங்கச்சிமடம், சேந்தனேந்தல், அழகன்குளம் கடற்கரை, ஏர்வாடி தர்கா, மும்முடிச்சாத்தான் ஆகிய இடங்களில், பொந்தன்புளி மரங்கள் உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில், வேதியரேந்தல், மதுரையில், அமெரிக்கன் கல்லுாரியிலும், இம்மரங்கள் காணப்படுகின்றன.
ஆயிரத்தின் அடையாளம் :
ஆயிரம் ஆண்டுகள் கடந்த, பொந்தன்புளி மரங்களின் அடிப்பாகத்தில், 60 பேர் அமரும் அளவில், பெரிய பொந்து உண்டாகும். முதிர்ந்த தண்டுகளில் ஏற்படும் துளைகளில், ஒரு லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்கலாம். ஆப்ரிக்கர்கள், இம்மரத்தில் துளையிட்டு, நீரை அருந்துவர். இலையின் புளிப்பு, மர பொந்துக்காக, இதை பொந்தன்புளி என்கின்றனர்.
பாதுகாக்க வேண்டும்:
ராமநாதபுரம், பெரியார் நகரில் உள்ள பொந்தன்புளி மரத்தில், பெரிய பொந்துகள் உள்ளதால், அதன் வயது, 1,000 ஆண்டுகளாக இருக்கலாம். பல இடங்களில், இம்மர பொந்துகளைக் கண்டு பயந்து, அவற்றை வெட்டி, எரித்துவிட்டனர். பொந்தன்புளி, கீழக்கரை, புல்லங்குடி பகுதிகளில் இருந்த மரங்களும் அழிக்கப்பட்டு விட்டன.
பாண்டிய நாட்டில், வெளிநாட்டினர் தங்கி இருந்ததற்கான அடையாளமாகவே, பொந்தன்புளி மரங்கள் உள்ளன. இவை, 1,000 ஆண்டு, தமிழக வணிக தொடர்பின் வரலாற்றுக்குச் சான்றுகள். ராமநாதபுரம் தவிர, பிற இடங்களில், மிக அரிதாக இம்மரங்கள் காணப்படுவதால், அவற்றை வேலியிட்டு பராமரிக்க வேண்டும். புதிதாக நடவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோய் தீர்க்கும் மருந்து! :
பொந்தன்புளி மரங்கள், 1,500 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. இவை, 14 மீட்டர் சுற்றளவு, 25 மீட்டர் உயரத்தில் வளரும். உருளை வடிவில், நேராக வளர்ந்து, உச்சியில் கிளை பரப்பும். ஆண்டில், ஏழு மாதங்கள் இலை உதிர்க்கும். கிளையின் நுனியில், வெள்ளை பூ பூக்கும். நீண்ட காம்புடன், பழுப்பு நிற காய் காய்க்கும், பழங்கள் நீண்ட காலம், மரத்திலேயே தொங்கும். இதன் பழச்சாறு, அம்மைக்கும்; அவித்த இலை காய்ச்சலுக்கும்; மரப்பட்டை காயங்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. கனியிலிருந்து, ‘சர்பத்’ தயாரிக்கின்றனர்.