தமிழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார், அண்ணன் தியாகு!

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் அண்ணன் தியாகு அவர்கள், தமிழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் தமிழர்களாவார்களாம். தமிழகத்தில் வாழ்ந்து வரும் தமிழரல்லாதவர்கள்,  தாய்மொழி தெலுங்கானாலும், மலையாளமானாலும், இந்தியானாலும், கன்னடமானாலும் அல்லது வேறு மொழியானாலும் அவர்கள் தமிழர்களாவர்கள் என்று புதிய கதை ஒன்றை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்தி வரும் திரு. தியாகு சொல்கிறார்.

எப்படி அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்களும், ஆசிய நாட்டவரும், நீக்ரோக்களும், அமெரிக்க தேசிய இனம் என சொல்லிக் கொள்கின்றனரோ, அதேபோல, தமிழகத்தில், தமிழரல்லாதவர்கள்,  தாய்மொழி தெலுங்கானாலும், மலையாளமானாலும், இந்தியானாலும், கன்னடமானாலும் அல்லது வேறு மொழியானாலும் அவர்கள் தமிழர்களாவர்கள் என்கிறார்.

இப்படித் தான், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா மணியரசன் அவர்களும், 1956க்கு முன் வந்தவர்கள் எல்லாம் தமிழர்கள் என ஒன்றை சொல்லி ஏற்கெனவே குழப்பியுள்ளார் என்பதை இங்கு நினைவு கொள்ள வேண்டும்.

தமிழர் தேசியம் பேசும் நாம், எந்த வகையிலும் தெலுங்கர்களுக்கோ, மலையாளிகளுக்கோ எதிரிகளல்ல. அவர்களது மொழிகளையும் நாம் மதிக்கிறோம். நண்பர்களாக, உடன் தான் பயணிக்கிறோம். ஏன் இன்னும், தமிழர்களாகிய நாம், பல முறை ஆட்சி அதிகாரம் அவர்களை நம்பி கொடுத்து வருகிறோம். அதற்காக, அவர்கள் எல்லாம் தமிழர் தேசிய இனத்தவர் என்பதை ஏற்க இயலாது.

தமிழகத்தில் வாழ்ந்து வரும் பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள், தங்களது தாய் மொழி எதுவாகினும், வெளிப்படையாக  சொல்லி, அதன் பெருமைகளை காட்டி பெருமை கொள்ளவே வேண்டும். அப்போதுதான், அவர்களை மனித குலம் மதிக்கும். மாறாக, அவர்களது தாய் மொழியை மறைத்து, தாங்களும் தமிழர்கள் என்றால், முதலில் அவர்கள், அவர்கள் மொழிக்கு செய்யும் துரோகமாகவே அனைவராலும் பார்க்கப்படும் என்பதை வேறு மொழியை தாய் மொழியாக கொண்டு தமிழகத்தில் வாழ்ந்து வருபவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் நாட்டில், தமிழர் தேசியம் பேசி வருவோர், தங்களையும் குழப்பிக் கொண்டு, தமிழர்களை குழப்பி, தாங்கள் நினைப்பதை எல்லாம் தமிழர் தேசியத்திற்கான வரையறையாக தமிழர்கள் மீது திணிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று அன்பாக உலகத் தமிழர் பேரவை கேட்டுக் கொள்கிறது.

அக்னி சுப்ரமணியம்
தலைவர்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: