லண்டன்,  மில்டன் கெய்ன்ஸ்-சில் வசித்த தமிழ்த் தேசியப் பற்றாளரான திரு. சபாபதி சபாநாயகம் மரணமடைந்தார்!

பிரித்தானியாவிலிருக்கும் லண்டனிலிருந்து 80 கி.மீ.-ல் உள்ள மில்டன் கெய்ன்ஸ் (MiltonKeynes – MK)யை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற கட்டிடப் பொறியிலாளர் திரு.சபாபதி சபாநாயகம் அவர்கள் சென்ற 01.05.2020ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவர் யாழ் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார்.

தமிழ்த் தேசியப் பற்றாளரான சபா அவர்கள் சமாதான காலகட்டத்தில் தாயகம் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து தன்னால் இயன்ற கட்டுமானப் பணிகளுக்கு உதவிகளை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் கஸ்ரோ (வீ.மணிவண்ணன்) அவர்களைச் சந்திந்து அவர் ஊடாக தமிழீழத் தேசியத் தலைவரின் நேரடி கண்காணிப்பில் இயங்கிய ராதா படையணியின் சக பிரிவுகளில் ஒன்றான கட்டிட நிர்மாணப் பிரிவில் பொறுப்பாளர் ஈசனுடன் இணைந்து தாயக கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

குறிப்பாக கிளிநொச்சியில் அமைந்த செஞ்சோலை மற்றும் நவம் அறிவுக்கூடம் ஆகியவற்றின் புதிய கட்டிடங்கள் அமைவதற்கான வடிவமைத்தல் மற்றும் பொறியியல் பணிகளை முன்னின்று செய்தவர் இவர்தான்.

இதே சமாதான காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள கேன் (CANE) என்று அழைக்கப்படும் Cancer Aid North/East Sri Lanka மருத்துவமனை கட்டிடப் பணியில் பிரித்தானியாவிலிருந்து சென்ற பிரதான பொறியிலாளர்களுடன் இணைந்து உதவிப் பொறியியலாளராகப் பணியாற்றினார்.

அந்த கால கட்டத்தில் யாழ்ப்பாணம், வன்னி என இரு நிலப்பரப்பிலும் மாறி மாறி தனது பணிகளை முன்னெடுத்திருந்தார்.

40 வருடங்களுக்கு மேலாக பிரித்தானியாவில் வசித்து வந்த சபா அவர்கள் INSTITUTE OF ENGINEERS FOR NORTH AND EAST என்ற வடக்கு மற்றும் கிழக்குக்கான பொறியியலாளர்களின் நிறுவனம் ஒன்றை உருவாக்கி தமிழீழம் என்ற நாடு உருவானால் அதற்கான கட்டுமான நிர்மாணப் பணிகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை ஏனைய பொறியிலாளர்களுடன் இணைந்து 10 வருடங்களுக்கு மேலாக ஆய்வுகளை மேற்கொண்டிருந்தவர் என்பது நினைவூட்டத்தக்கது.

மில்டன் கெய்ன்ஸ் பகுதியில் நீண்ட காலம் வசித்து வந்த சபா அவர்கள், தீவிர கடவுள் பக்தி இல்லாத போதும் வியாபார நோக்கமற்று அப்பகுதியில் வாழும் தமிழ் சமூகத்தினரை ஒன்றிணைக்க முருகன் கோவில் ஒன்றினை வடிவமைத்து அதன் கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவர். தற்போது அக்கோவில் முதலாம் கட்டத்தை நிறைவு செய்துள்ளது.

மறைந்த சபாவின் இறுதி சடங்கு 07-05-2020 அன்று நடைபெறவுள்ளது.

தற்போதைய கொரோனா என்ற அசாதாரண சூழ்நிலைகாரணமாக அனைவரின் வருகையை தவிர்த்துக் கொள்ளும்படியும், உங்கள் இரங்கல் செய்தியினை தொலைபேசி வாயிலாகவோ அல்லது சமூக வலையத்தளங்களினூடாகவோ பகிர்ந்து கொள்ளும்படி குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

#Covid19 #CoronaTamils

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>