லண்டனில் தமிழ் தேசிய செயல்பாட்டாளரும், தொழிலதிபருமான லோகசிங்கம் பிரதாபன் கொரோனாவிற்கு மரணம்!

லண்டனில் நீண்ட கால தமிழ் தேசிய செயல்பாட்டாளரும், தமிழ் பற்றாளரும், பிரித்தானிய விளையாட்டுக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக செயல்பட்டு வந்த லோகசிங்கம் பிரதாபன் அவர்கள் கொரோனா தாக்கி பலியானார். சுமார் 40 நாட்களாக உயிருக்குப் போராடிய லோகசிங்கம் பிரதாபன் கடந்த 3ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரை காக்க அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்தும் பலனின்றி சனிக்கிழமை (02-05-2020) காலை மரணமடைந்து வேதனையளிக்கிறது.

இவரைப் போலவே இருந்து வந்த ஆனந்த நடேசன் மாஸ்டர் அவர்கள், கொரோனா தொற்று காரணமாக லண்டனில் சில வாரங்களுக்கு முன்னர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் வசித்து வந்த லோகசிங்கம் பிரதாபன் அவர்கள் ஈழம் வவுனியாவை சேர்ந்தவர். இவர் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராவர். லண்டனில் ஸ்டோன் பிரிட்ஜ் பார்க் என்ற இடத்தில் (Stonebridge Park) பிரிட்ஜ் பார்க் (Bridge Park Hotel) நடத்தி வந்தவர்.

தமிழ் தேசிய நிகழ்ச்சிகளில் பிரித்தானியாவில் நடைபெறும் மெய்வல்லுநர் போட்டிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் முன்னிற்று உழைத்தவர். ஜொலி ஸ்ரார் என்ற துடுப்பாட்ட கழகத்தையும் நிறுவி நடத்தி வந்தவர்.

16.02.2018 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் கல்லூரி அதிபர் திரு.சதா நிமலன் அவர்கள் தலமையில் சிறப்புற நடைபெற்ற, இந்நிகழ்விற்கு முதன்மை சிறப்பு விருந்தினராக யாழ் இந்துவின் பழைய மாணவன் என்ற நிலையில் திரு. லோகசிங்கம் பிரதாபன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

இவரது தந்தையும் யாழ் இந்துக் கல்லூரியன் பழைய மாணவராவார். அவர் வவுனியாவில் பாடசாலை ஒன்றின் அதிபராகவும் இருந்துள்ளார். அத்துடன் அவரது உறவினர்களும் அதே பாடசாலையில் கல்வி கற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதாபன் அவர்களின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர் நண்பர்களுக்கும் எமது உலகத் தமிழர் பேரவையின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

#Covid19 #CoronaTamils

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: