இரானில் 16 நாள்களாகப் படகில் வசிக்கும் 721 தமிழக மீனவர்கள்!

வெளியே சென்றால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் கீஸ் தீவில் உள்ள துறைமுகத்தில் கடந்த 16 நாள்களாக மீனவர்கள் படகிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 721 மீனவர்கள் இரான் நாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். தற்போது அந்நாட்டில் கொரானா வைரஸ் பரவி வருவதால், அங்குள்ள மீனவர்கள் சொந்த நாட்டுக்கு வர முடியாமல் இரானின் கீஸ் தீவு உள்ளிட்ட பகுதிகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். மேலும், அவர்களுக்கு உணவு, மருத்துவப் பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் உடனடியாக அவர்களை மீட்க வேண்டும் என்றும் குமரி மாவட்டத்திலிருந்து பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மீனவர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், மீனவர்களை மீட்டுவரக்கோரி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று (12-03-2020) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் கூறியதாவது : “கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இரான் நாட்டுப் பகுதிகளில் உள்ள தீவுகளில் தவித்து வருகின்றனர். தூதரகத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தூதரக அதிகாரிகள் அங்கு சென்றபோது மீனை எடுத்துச் சென்றுவிட்டனர். அவர்களிடம் பணமும் இல்லை. இரானில் படிக்கச் சென்ற மருத்துவ மாணவர்களையும் கரைப்பகுதியில் இருந்தவர்களையும் அழைத்து வந்துள்ளனர். ஆனால், மீனவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை.

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், இன்று டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து மீனவர்களை மீட்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். விமான டிக்கட்டுக்கான தொகையை நாங்கள் கொடுக்கிறோம் என மீனவர்கள் கூறியும் அவர்களை மீட்க எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இரானில் கொரோனா வைரஸ் பரவுவதால் பள்ளிகள், வணிக நிறுவனங்களை மூடிவிட்டார்கள். வெளியே சென்றால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் கீஸ் தீவில் உள்ள துறைமுகத்தில் கடந்த 16 நாள்களாக மீனவர்கள் படகிலேயே வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கைவசம் இருந்த உணவுகள் தீர்ந்துவிட்டதாகத் தெரிவித்தனர். எனவே, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்களுடன் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகிறோம்” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: