உலகின் மூன்றாவது மிகப் பெரிய புத்தகக் திருவிழா ஷார்ஜாவில் – முதல் முறையாகத் தமிழ்ப் புத்தகங்கள்!

உலகின் மூன்றாவது மிகப் பெரிய புத்தகக் திருவிழாவில் முதல் முறையாகத் தமிழ்ப் புத்தகங்கள்!

உலகின் மூன்றாவது மிகப் பெரிய புத்தகக் திருவிழாவில் முதல் முறையாகத் தமிழ்ப் புத்தகங்கள்!

அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபெறும் உலகின் மிகப் பெரும் புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றான ஷார்ஜா புத்தகக்காட்சியில் முதல் முறையாக இந்த ஆண்டு பங்கேற்கின்றன தமிழ்ப் பதிப்பகங்கள். லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அரேபிய நாடுகளில் வசித்துவரும் நிலையில், ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் தமிழ்ப் புத்தகங்கள் இடம் பெறுவதில்லை என்பது நெடுநாள் குறையாக இருந்தது. இந்த ஆண்டு தன்னுடைய தீவிர முயற்சியின் விளைவாக அந்தக் குறைக்குத் தீர்வு கண்டிருக்கிறது தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி).

ஷார்ஜாவில் நடப்பது உலகின் மூன்றாவது மிகப் பெரிய புத்தகக் கண்காட்சி. சுமார் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்கும், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளிலான புத்தகங்கள் இடம்பெறும் புத்தகக்காட்சி இது. ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமியின் கனவுத் திட்டமாகக் கருதப்படும் இந்தப் புத்தகக் கண்காட்சி முழுமையாகச் சுற்றிப் பார்ப்பதற்கே மூன்று நாட்கள் தேவைப்படும் அளவுக்குப் பெரியது.

புலம்பெயர் தமிழர்களைப் பொருத்த அளவில் அவர்கள் இடையேயான சமூகக் கூடலுக்கான, இணைப்புக்கான புள்ளிகளில் ஒன்று இலக்கியமும் வாசிப்பும். பல்வேறு நாடுகளிலும் தமிழ்ச் சங்கங்கள்தான் தமிழர்களை ஒருங்கிணைக்கும் புள்ளியாக இருக்கிறது.

அரபு நாடுகளில் ஏராளமான வாசகர்கள் இருக்கிறார்கள், பல்வேறு தமிழ் இலக்கிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன என்றாலும், அங்குள்ளவர்களுக்குத் தமிழ்ப் புத்தகங்கள் வாங்குவதென்பது கடினமாகவே இருந்து வருகிறது. இணையதளங்கள் ஒரு வாய்ப்பு என்றாலும், புத்தகத்தின் விலையைக் காட்டிலும் அஞ்சல் செலவுக்கு அதிகமாகச் செலவிட வேண்டிய நிலை இருக்கிறது.

இத்தகைய சூழலில், ஷார்ஜா புத்தகக்காட்சியில் தமிழ்ப் பதிப்பாளர்கள் பங்கெடுப்பது அரபு நாடுகளைச் சேர்ந்த வாசகர்கள் புத்தகங்களை வாங்கிக் குவிக்கவும், தமிழ் அறிவாளுமைகளை நேரில் சந்தித்து உரையாடவும், இதையொட்டிய இலக்கியச் சந்திப்புகளுக்குத் திட்டமிடவும், புதிய தொடர்புகளைப் பேணவும் ஒரு தொடக்கமாக அமைந்திருக்கிறது.

ஷார்ஜா புத்தகக்காட்சியில் முப்பது தமிழ்ப் பதிப்பகங்கள் பங்கேற்கின்றன. ஆயிரம் தலைப்புகளில் இருபதாயிரம் புத்தகங்கள் வாசகர்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. மேலும், பபாசியின் இணையதளத்தில்

(www.bapasi.in) புத்தகக்காட்சியில் பங்கேற்காத பதிப்பகங்களின் புத்தகங்களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. புத்தகக் காட்சியில் கிடைக்கும் புத்தகங்கள் போக, இந்த இணையதளத்தில் வரிசைப்படுத்தப்பட்ட புத்தகங்களும் வாசகர்களுக்குக் கிடைக்கத் தேவையான உதவிகளை பபாசி மேற்கொண்டிருக்கிறது.

இது ஒரு நல்ல தொடக்கம். என்றாலும், அரசின் உதவி இங்கே தேவைப்படுகிறது. இப்படியான சர்வதேசப் புத்தகக்காட்சிகளுக்குப் பதிப்பகங்களையும் படைப்பாளிகளையும் அரசே தமது செலவில் அழைத்துச்செல்லும் முன்னுதாரணங்களைப் பல அரசுகள் ஏற்கெனவே செய்கின்றன. தமிழக அரசும் தமிழ் வளர்ச்சித் துறையும் இதுபோன்ற முயற்சிகளுக்குப் பக்கபலமாகச் செயல்படுவது முக்கியம். அடுத்தடுத்த தளங்களுக்கு மொழியை எடுத்துச்செல்ல இது உத்வேகம் தரும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: