முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு – பிலவுக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் ராணுவத்தினர் வசமுள்ள பொது மக்களின் நிலங்களை மார்ச் மாதம் 4 ஆம் தேதிக்குள் விடுவிப்பதற்கு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
27/02/2017 மாலை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஜனாதிபதியுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலம் விடுவிப்புக்கான போராட்டம் குறித்து பேச்சுக்கள் நடத்தியுள்ளனர். அப்போது மக்களுடைய நிலங்களில் இருந்து இராணுவமும், விமானப்படையினரும் வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியதாகவும், இந்தப் பகுதியிலுள்ள மக்களுக்குச் சொந்தமான நிலங்களை மார்ச் மாதம் 4 ஆம்தேதிக்குள் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு படையதிகாரிகளுக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரதிச் செயலாளருக்கும் ஜனாதிபதி உடனடியாகவே உத்தரவிட்டதாகவும் இரா.சம்பந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
கேப்பாப்பிலவு மக்களுக்கு சொந்தமான 42 ஏக்கர் காணி விடுவிப்பு :
கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பில் விமானப்படை முகாம் அமைந்திருந்த 42 ஏக்கர் மக்களின் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. 54 பேருக்கு சொந்தமான நிலம் இன்று விமானப்படையினரால் விடுவிக்கப்பட்டதான முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
பிலவுக்குடியிருப்பில் 29-வது நாளாகவும், புதுக்குடியிருப்பில் 26-வது நாளாகவும் விமானப் படையினர் வசமிருந்த மக்களின் சொந்தக் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி பிலக்குடியருப்பு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.