வல்வெட்டித்துறை மருத்துவர் மயிலேறும் பெருமாள் ஐயா-வுக்கு ஒரு சல்யூட்டும் அடித்து வந்தோம்!

வல்வெட்டித்துறைக்கு மருத்துவர் மயிலேறும் பெருமாள் ஐயா-வுக்கு ஒரு சல்யூட்டும் அடித்து வந்தோம்!

நான் 2016-ம் ஆண்டு ஈழப் பயணத்தின்போது, வீரத்தலைமகனை பெற்றெடுத்த இடமான வல்வெட்டித்துறைக்கு பயணமானேன். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற மறக்க இயலாத வீரம் செறிந்த கதைகளை கேட்டும் பார்த்தும் வந்தேன். தேசியத் தலைவர் பிறந்த இல்லம், வட்டுக் கோட்டை தீர்மானத்தை மாநாட்டில் படிக்கும் முன்பு, இறுதியாக்கப்பட்ட அந்த மாடி வீடு, கிட்டுவின் உடைக்கப்பட்டு சிதிலமடைந்திருந்த சிலைகள் அதற்கு அன்மையில் லெப்.கேணல் குமரப்பா – கேணல் புலேந்திரன் உட்பட 12 பேருக்கு விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்டிருந்த சிதிலமடைந்திருந்த மிக உயரமான நினைவு தூண் – அதன் வளாகம், தேசியத் தலைவர் அவர்களின் தந்தையார் நிர்வகித்து வந்த பரம்பரை கோயில், இந்திய அமைதிப்படையால் போராளிகளோடு அடைத்து வைத்து குண்டு வைத்து தகர்க்கப்பட்ட கடற்கரையோரம் உள்ள சிறு வீடு என பல்வேறு வரலாற்று சான்றுள்ள நினைவிடங்களை காண கூடியதாக இருந்தது. இப்படி பார்த்த சில இடங்களில் மறக்க இயலாத இடம் – வல்வெட்டித்துறை மருத்துவமனை.

தேசியத் தலைவர் அவர்களின் தாயார் பார்வதியம்மாள் மருத்துவம் பார்த்த வல்வெட்டித்துறை மருத்துவமனைக்கு சென்று பார்வையிடு வாய்ப்பை பெற்றேன். (பார்வதியம்மாள் இரண்டாம் முறையாக சென்னைக்கு மருத்துவ பரிசோதனைக்கு வர இருந்தபோது அதற்கு முயற்சி செய்தவர்களின் நானும் ஒருவன். இந்த கதையை பிறகு விரிவாக பார்க்கலாம்) என்னுடன் அன்று இருந்தவர்கள் இன்றைய வட – மாகாண உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம் மற்றும் விந்தன் கனகரத்தினம்.

dr_mylerum_perumal_parvathy_ammalஅம்மா பார்வதியம்மாள், அந்த மருத்துவமனையில்தான் இறுதியாக மருத்துவம் பார்த்துக் கொண்டார். அவருக்கு மருத்துவம் பார்த்தவர் ஓய்வு பெற்ற மாவட்ட வைத்திய அதிகாரி (DMO) மருத்துவர் மயிலேறும் பெருமாள் ஐயா அவர்கள். மருத்துவமனையின் வரவேற்பறையில் என்னை அவரிடம் அறிமுகம் செய்து வைத்த வேளையில், அவரது இருகரம் பற்றி எனது நன்றியினை தெரிவித்துக் கொண்டேன். நன்றியை எதிர்பார்க்காத அவர், வாருங்கள் அம்மா மருத்துவம் செய்த இடம் மற்றும் மருத்துவ சேவையாளர்கள் இன்னும் உள்ளனர், அவர்களையும் அறிமுகப்படுத்துகிறேன் என உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு அம்மா படுத்திருந்த கட்டிலை வணங்கிவிட்டு, அறிமுகம் செய்யப்பட்ட தாதிகளிடமும் மற்றும் மருத்துவ சேவையாளர்களிடமும் நன்றி தெரிவித்து, அம்மாவிற்கு அளிக்கப்பட்ட மருத்துவம் குறித்து பேசினார். நெகிழ்ச்சியடைந்த நான், உங்களின் நினைவாக ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வோம் ஐயா, என்ற போது மறுக்காமல் மருத்துவமனையின் நுழைவாயிலை நோக்கி பேசிக் கொண்டே நடந்தோம். அப்பொழுது, தான் இந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றேன், என்றார். ஆச்சரியமடைந்த நான், ஆம் ஓய்வு பெற்ற நீங்கள் இன்னும் ஏன் இங்கு மருத்துவரான பணியாற்றி வருகின்றீர்கள் – வீட்டில் ஒய்வெடுக்க வேண்டியதுதானே என வினவினேன்.

அதற்கு நான் ஓய்வெடுத்தால், இங்குள்ள மக்களுக்கு மருத்துவம் செய்ய யாரும் இல்லை. எனவே சம்பளம் பெறாமல் இங்கு இப்பொழுது பணி செய்து வருகிறேன் என்றார். எனக்கு தூக்கி வரி போட்டது. அவரது தியாகத்தை நினைத்து எனது நினைவு பரிசாக கொண்டு சென்ற ஒரு பொருளை வாங்கி கொள்ள வேண்டும் என கட்டாயபடுத்தி அவரது கையில் திணித்தேன். சிரித்துக் கொண்டே அன்போடு ஏற்றுக் கொண்டே வரவேற்பறை வந்தடைந்தோம். அப்பொழுது வெளியே ஒரு தாணி வந்து நின்றது தெரிந்தது. அதிலிருந்து நோயாளியும் மற்றிருவரும் இறங்குவதை பார்த்த மருத்துவர் மயிலேறும் பெருமாள் ஐயா, எம்மிடம் புகைப்பட எடுக்க இயலாத நிலையை சொல்லிக் கொண்டே, அந்த தாணியை நோக்கி ஓடி மருத்துவ பணியினை மேற்கொள்ள சென்றார். இதைப்பார்த்த எனக்கு மயிலேறும் பெருமாள் ஐயா மீது இன்னும் மரியாதை கூடி ஒரு சல்யூட்டும் அடித்து நகர்ந்தோம். அந்த தியாக மருத்துவர் இப்பொழுது நம்மையெல்லாம் விட்டு பிரிந்தார் என கேட்கும் போதது, வல்வெட்டிதுறை மற்றும் அதனை சார்ந்த பகுதி மக்கள், மருத்துவர் இல்லாமல் இருக்கப்போகும் நிலையை எண்ணி மன பதைபதைக்கிறது.

வல்வெட்டித்துறை மருத்துவமனைக்கு இன்னும் பல சிறப்புகள் உள்ளன. அதில் ஒன்று மருத்துவனையோடு ஒட்டிய ஒரு பகுதியில் விடுதலைப்புலிகள் சுரங்கம் அமைத்து மருத்துவம் பார்த்து வந்ததற்கான அடையாளமாக இன்னும் அப்பகுதி பாதுகாக்கப்பட்டு வருகிறது. சுரங்க மருத்துவமனை, எவ்வகை குண்டு வீச்சுக்கும் பாதிக்காத வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதை பார்க்க புலிகள் போராளிகளின் மேல் கொண்டிருந்த அக்கரையை நேரில் பார்த்த போதும் விடுதலைப்புலிகளின் வீரத்தின் மீதிருந்த மதிப்பும் மேலும் உயர்ந்தது எனலாம்.

வல்வெட்டித்துறை வரலாற்றில் என்னென்றும் நிலைத்து நிற்கும் இடம் தான்.

அக்னி, ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் பேரவை

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: