இலங்கை தமிழர்கள் விட்ட கண்ணீர் மறக்க முடியாது: அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்..!

தமிழகத்திலுள்ள 106 முகாம்களில் இலங்கை தமிழர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இலங்கை தமிழர்களுக்காக முதல்கட்டமாக ரூ.142.16 கோடி செலவில் 3,510 புதிய வீடுகள் கட்ட முதல்வர் அடிக்கல் நாட்டினார். மறுவாழ்வு முகாம்களில் ரூ.30 கோடி மதிப்பிலான இதர அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து பி.இ. மாணவி ஒருவருக்கு இலவச கல்விக்கான முழு கல்வி கட்டண காசோலையை முதல்வர் வழங்கினார். பின்னர் பேசிய அவர்; எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள்; கடல் தான் நம்மை பிரிக்கிறது. இலங்கை தமிழர்கள் விட்ட கண்ணீர் மறக்க முடியாது; நாம் அனைவரும் தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள்.

இனத்தால் நாகரீகத்தால் ஒன்றுபட்டவர்கள் தமிழர்கள். இலங்கை தமிழர்கள் அகதிகளோ, அனாதைகளோ அல்ல; நாங்கள் இருக்கிறோம். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல; என்னை உங்களின் சகோதரனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் திமுக. கடந்த 10 ஆண்டு காலம் இலங்கை தமிழர்கள் குறித்து அதிமுக அரசு கவலைப்படவில்லை. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் இலங்கை தமிழர் நல வாழ்வு திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளது. முகாம் வாழ் தொழில்முனைவோர்களுக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இலங்கை தமிழர்களுக்கான நலத் திட்டங்கள் மேலும் தொடரும். இலங்கை தமிழர் முகாம்களின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும். முகாம்களில் உள்ள இலங்கை தமிழ் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். முகாம் வாழ் தமிழர்களுக்கு கோஆப் டெக்ஸ் மூலம் தரமான ஆடைகள் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
 
நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: