இலங்கை தமிழர் பகுதி ஆளுநர் யார்? தொடரும் இழுபறி!

இலங்கை தமிழர் பகுதி ஆளுநர் யார்? தொடரும் இழுபறி!

இலங்கையில் கடந்த 16 ஆம் தேதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், நாட்டின் அரசியல் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இலங்கையில் 9 மாகாணங்கள் காணப்படுகின்ற நிலையில், குறித்த 9 மாகாணங்களின் ஆட்சி காலமும் நிறைவடைந்திருந்தன.

01.வடக்கு மாகாண சபை – ஆட்சி காலம் நிறைவடைந்து ஒரு வருடம்.

02.கிழக்கு மாகாண சபை – ஆட்சி காலம் நிறைவடைந்து 2 வருடங்கள்.

03.மத்திய மாகாண சபை – ஆட்சி காலம் நிறைவடைந்து ஒரு வருடம்.

04.ஊவா மாகாண சபை – ஆட்சி காலம் நிறைவடைந்து 2 மாதங்கள்.

05.சப்ரகமுவ மாகாண சபை – ஆட்சி காலம் நிறைவடைந்து 2 வருடங்கள்.

06.வடமத்திய மாகாண சபை – ஆட்சி காலம் நிறைவடைந்து 2 வருடங்கள்.

07.வடமேல் மாகாண சபை – ஆட்சி காலம் நிறைவடைந்து ஒரு வருடம்.

08.தென் மாகாண சபை – ஆட்சி காலம் நிறைவடைந்து 8 மாதங்கள்

09.மேல் மாகாண சபை – ஆட்சி காலம் நிறைவடைந்து 8 மாதங்கள்.

மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, அதன் அதிகாரங்கள் ஆளுநர் வசமாவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நிலையில், மாகாண சபைகளின் அதிகாரங்கள் வைத்திருந்த அனைத்து ஆளுநர்களையும் பதவி விலகுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அடுத்து, அனைத்து ஆளுநர்களும் உடனடியாக பதவி விலகியிருந்தனர்.

இவ்வாறு பதவி விலகிய ஆளுநர்களுக்கு பதிலான 8 மாகாண சபைங்களுக்கான ஆளுநர் நியமனங்கள் கடந்த காலங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவினால் வழங்கப்பட்டிருந்தது.

01.மேல் மாகாணம் – டொக்டர் சீதா அரபேபொல

02.மத்திய மாகாணம் – லலித் யு கமகே

03.ஊவா மாகாணம் – ராஜா கொல்லூரே

04.தென் மாகாணம் – டாக்டர் விலி கமகே

05.வடமேல் மாகாண – ஏ.ஜே.எம் முஸம்மில்

06.சப்ரகமுவ மாகாணம் – டிகிரி கொப்பேகடுவ

07.கிழக்கு மாகாணம் – அனுராதா அரம்பே

08.வடமத்திய மாகாணம் – திஸ்ஸ விதாரண

இலங்கையின் 9 மாகாணங்கள் இருக்கின்ற நிலையில், தமிழர்கள் அதிகளவில் செறிந்து வாழும் மாகாணமாக வட மாகாணம் திகழ்கின்றது.

இந்தியாவினால் 1987ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன – ராஜீவ் காந்தி ஆகியோரினால் கையெழுத்திடப்பட்ட 13ஆவது திருத்தத்தின் ஊடாக தமிழர்களை முன்னிலைப்படுத்தியே மாகாண சபைகள் விரிவாக்கப்பட்டிருந்தன. 1987ஆம் ஆண்டு மாகாண சபை உருவாக்கப்படும் சந்தர்ப்பத்தில் 8 ஆளுநர்கள் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை அரசியலமைப்பின் 154(அ) சரத்தின் பிரகாரம், மாகாண சபைகள் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மாகாணங்களுக்கும் ஜனாதிபதியினால் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். ஜனாதிபதியின் நன்மதிப்பை வென்ற ஒருவரே ஆளுநராக நியமிக்கப்படுகின்றமை வழக்கமான ஒன்றாக காணப்பட்டது.

ஆரம்பகாலத்தில் வடக்கு கிழக்கு ஆகிய மாகாணங்கள் ஒன்றிணைந்திருந்த நிலையில், இலங்கையில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக அந்த மாகாணங்கள் உரிய முறையில் இயங்காதிருந்தது.

இதையடுத்து, மஹிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக பதவி வகித்த 2006ஆம் ஆண்டு காலப் பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவொன்றின் ஊடாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு, இரண்டு மாகாண சபைகளாக பெயரிடப்பட்டன.

இந்த நிலையில், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் முதலாவதாகவும், வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் இரண்டாவதாகவும் நடத்தப்பட்டு, முதலமைச்சரின் கீழ் ஆட்சி நடத்தப்பட்டது. மாகாண சபைகள் கலைக்கப்பட்ட நிலையில், மாகாணத்திற்கான ஆட்சி பொறுப்பு ஆளுநர்கள் வசமாகியிருந்த போதிலும், புதிய அரசாங்கம் புதிய ஆளுநர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்திருந்தது.

8 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள பின்னணியில், தமிழர்கள் அதிகளவில் வாழும் வடக்கு மாகாணத்திற்கு இதுவரை ஆளுநர் ஒருவரை நியமித்துக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

13வது திருத்தத்தை அமுல்படுத்த மாற்று வழிகளை சிந்திக்க வேண்டும் என கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ள பின்னணியில், அதிகார பகிர்வு தொடர்பில் அதிகளவில் பேசப்படும் வட மாகாணத்திற்கு இன்னும் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படாமை தொடர்ந்தும் கேள்விகளை எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: