ஐ நா வின் மனித உரிமை மீறல் தீர்மானத்திலிருந்து விலக இலங்கை முடிவு!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் இதற்கான முடிவை எட்டியுள்ளதாக பிரதமர் மகிந்த ராசபக்ச புதன்கிழமை அதிகாரகபூர்வமாக அறிவித்தார்.

இலங்கை ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்கா செல்ல பயணத்தடை விதிக்கப்பட்ட சம்பவத்தை கருத்தில் கொண்டே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஷவேந்திர சில்வா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்து அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க பயணத்தடை விதித்திருந்தது.

இந்த நிலையிலேயே இலங்கை அரசாங்கம் இன்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கு அப்போதைய இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியமை மிகப் பெரிய காட்டிக் கொடுப்பு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை படையினர் மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் 2015ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவை வழங்கியதாக அவர் நினைவூட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளுக்கு அப்பாற் சென்று 2011ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே 2015ஆம் ஆண்டு பிரேரணை தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் இலங்கை பாதுகாப்பு தரப்பனருக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன உள்ளடங்கிய நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயங்களை கருத்திற் கொண்டே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக பிரதமர் மகிந்த ராசபக்ச குறிப்பிட்டுள்ளார்.

30/1 தீர்மானம் :

பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இலங்கையின் இணை அனுசரணையில் ஐநா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணையே 30/1 தீர்மானமாகும்.

2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த தீர்மானம் ஐநா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தில் பல முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் யுத்தக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் விசாரணைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக சர்வதேச நீதிபதிகளின் பங்குப்பற்றுதலுடன் விசாரணைகளை நடத்த வேண்டும் என அதில் கூறப்பட்டது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபித்தல்.

நட்டஈடு வழங்கும் அலுவலகத்தை ஸ்தாபித்தல்.

விசேட நீதிமன்ற கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு தேசிய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுதல்.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துதல்.

விசேட ஆலோசனையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் நீதிமன்ற கட்டமைப்பொன்றை உருவாக்குதல்.

நீதிமன்றம் மற்றும் சட்ட நிறுவனங்களை முன்னெடுத்து செல்வதற்கான நபர்களை நியமித்தல்.

கலப்பு நீதிமன்ற கட்டமைப்பை உருவாக்குவதற்கு சர்வதேச தரப்பின் நிதியுதவிகள், பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளுதல்.

இவ்வாறு ஐநா மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட சில விடயங்கள் இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், முக்கிய சில தீர்மானங்கள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

வரும் மனித உரிமை பேரவையின் 43ஆவது கூட்டத் தொடருக்கு இலங்கையின் பிரசன்னம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் குறிப்பிடுகின்றது.

இந்த கூட்டத் தொடரில் பங்குப்பற்றுவது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு இராஜாதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, 2015 ஆக்டோபர் மாதம் இலக்கம் 30/1 மற்றும் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலக்கம் 34/1 ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதை இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை நல்லிணக்கம், பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமை முன்னேற்றம் குறித்து 2019 மார்ச் மாதம் இலக்கம் 40/1 தீர்மானத்திற்கும் இலங்கை இணை அனுசரணை வழங்கியுள்ள நிலையில், இந்த அனைத்து தீர்மானங்களிலும் இருந்து வெளியேற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன கூறுகின்றார்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: