இலங்கையில் நான்கு மாதங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் நீக்கம்!

இலங்கையில் நான்கு மாதங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் நீக்கம்!

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி இரவு முதல் அவசர கால சட்டம் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமல்படுத்தியிருந்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்தில், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமையவே அவசர கால அமலாக்கம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதியினால் அமல்படுத்தப்பட்ட அவசர காலச் சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி அனுமதி வழங்கியது.

அதன் முதல் ஒவ்வொரு மாதமும் 22ஆம் தேதி அவசர காலச் சட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீடித்து வந்திருந்தார். இதனால், ஜுலை மாதம் 22ஆம் தேதி ஒரு மாதத்திற்கு அமுல்படுத்தும் வகையிலான அவசர காலச் சட்டம் வர்த்தமானியில் கையெழுத்திட்டு, மேலும் ஒரு மாதத்திற்கு அவசர காலச் சட்டம் நீடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்றிரவுடன் இந்த அவசரகாலச் சட்ட நீடிப்பு நிறைவடைந்துள்ள பின்னணியிலேயே, மேலும் அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான யோசனை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற 30 வருட கால உள்நாட்டு யுத்தம் காரணமாக பல வருடங்கள் அமல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவினால் ரத்து செய்யப்பட்டிருந்தது. எனினும், இலங்கையில் ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தால் ஒன்பது வருடங்களின் பின்னர் அவசரகாலச் சட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

ஏப்ரல் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும் அவசர காலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: