தங்கம் வென்று சாதனை படைத்த இலங்கை இளைஞர்!

இலங்கை கிழக்கு மாகாணம் – காத்தான்குடியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர்தான் அனீக். 2018 ஆம் ஆண்டு தனது இடது காலை இழந்தார். கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட காயம், புற்றுநோயாக மாறியதால் அவரது காலை அகற்ற வேண்டியதாயிற்று.

இவர் இலங்கை தேசிய பரா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் தேசிய பரா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி, கடந்த 05 மற்றும் 06 ஆம் தேதிகளில் கொழும்புவிலுள்ள சுகததாச மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட அனீக் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளில் கலந்து கொண்டு, இந்த மூன்றிலும் முதலிடத்தை பெற்று தங்கப் பதக்கங்களை தட்டிச் சென்றார்.

தேசிய பராலிம்பிக் குழு ஏற்பாடு செய்திருந்த இப்போட்டியில் 190-க்கும் மேற்பட்ட தடகள போட்டிகள் இடம்பெற்றன. இவற்றில் சுமார் 800 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் 18 வயதுக்குக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில் அனீக் கலந்துகொண்டார்.

‘எனக்கு ஏற்பட்ட எந்தவோர் இழப்பும், எனது திறமைகளுக்குத் தடையாக அமைந்து விடவில்லை’ என்று சொல்வது போல், தனக்குக் கிடைத்த மூன்று தங்கப் பதக்கங்களையும் கழுத்தில் அணிந்து கொண்டு, புன்னகைத்து நிற்கிறார் அனீக்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>