இலங்கை ஒரே நாடு ஒரு சட்டம்: ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் சேர்ப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த அக்டோபர் 26ம் தேதி விசேட வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டார்.

இதன்படி, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டதுடன், அதில் 13 உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

இலங்கையில் சர்ச்சையை தோற்றுவிக்கும் வகையில் செயற்படும் பௌத்த அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இந்த செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார்.

இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஒருவரை, எவ்வாறு சட்ட உருவாகத்திற்கான பரிந்துரைகளை முன்வைக்க நியமிக்க முடியும் என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்ததுடன், தமது எதிர்ப்புக்களையும் வெளியிட்டிருந்தன.

அத்துடன், 9 சிங்களவர்களும், 4 முஸ்லிம்களும் இந்த செயலணியில் நியமிக்கப்பட்டிருந்தனர்.

எனினும், இந்த செயலணியில் ஒரு தமிழர் கூட இடம்பிடிக்கவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவ்வாறான சர்ச்சை வலுப்பெற்ற நிலையில், ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

செந்தில் தொண்டைமான்

இந்த சந்திப்பில் கலந்துக்கொண்ட, பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர், ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்படாமை குறித்து தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை இணைத்துக்கொள்வதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி, இதன்போது செந்தில் தொண்டமான் மற்றும் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இவ்வாறான பின்னணியில், ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணிக்கு தமிழர்களை இணைத்துக்கொள்ள ஜனாதிபதி உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் (10) வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தலில் மூன்று தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமலிங்கம் சக்கரவர்த்த கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோர் இந்த செயலணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவின் கையெழுத்துடன், இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ராஜபக்ச

இதேவேளை, ஏற்கனவே இந்த செயலணியின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்த இருவர், பதவி விலகியுள்ளனர்.

பேராசிரியர் தயானந்த பண்டா மற்றும் விரிவுரையாளர் மொஹமட் இந்திகாப் ஆகியோர் பதவி விலகியுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் அறிவித்துள்ளார்.

இதன்படி, திருத்தங்களுடன் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் படி, 14 உறுப்பினர்கள் இதில் இடம்பிடித்துள்ளனர்.

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் 8 சிங்களவர்கள், மூன்று முஸ்லிம்கள் மற்றும் மூன்று தமிழர்கள் இடம்பிடித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் இந்த செயலணியின் ஊடாக பெண்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போது பெண் உறுப்பினர் ஒருவரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் முதல்வரான யோகேஸ்வரி பற்குணராஜா, இந்த செயலணியில் இடம்பிடித்துள்ள ஒரேயொரு பெண் உறுப்பினராவார்.

இந்த செயலணியின் ஊடாக அனைத்து சமூக பெண்களையும் யோகேஸ்வரி பற்குணராஜா பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

இதேவேளை, இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி, ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் பதில் நீதவானாக கடமையாற்றும் ஒரு சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கிழக்கு மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஐயம்பிள்ளை தயானந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழர்களின் அழுத்தம் காரணமா?

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, தமிழர்கள் நியமிக்கப்படாமை குறித்து தானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வலியுறுத்தியிருந்ததாக பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இதையடுத்தே, தமிழர்களை ஜனாதிபதி செயலணியில் இணைத்துக்கொள்ள ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார்.

ஞானசார தேரரின் என்ன சொல்கிறார்?

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி குறித்து, அதன் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் கடந்த முதலாம் தேதி விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த ஊடக சந்திப்பில் தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்படாமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஞானசார தேரர் பதில் வழங்கியிருந்தார்.

நாட்டில் ஏதாவது ஒரு விடயத்தை செய்யும் போது, அதில் இனம், மொழி குறித்து ஆராயப்படுவதாகவும், அது தேவையற்ற ஒன்று எனவும் அவர் பதில் வழங்கியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறித்து, பிபிசி தமிழ், ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரரை தொடர்புக் கொண்டு வினவியது.

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பணிகள் நிறைவடைந்த 4 மாதங்களுக்குப் பின், அனைத்து கேள்விகளுக்கும் பதில் வழங்க தாமும் தமது செயலணியும் தயாராகவுள்ளதாக கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

நன்றி : மலேசிய கினி

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: