இலங்கை அரசியலில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து தற்போது மீண்டும் பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க.
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவுக்கும் இடையே இருந்த கருத்து மோதல் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் ரணில், அதிபர் சிறிசேனவால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதன் பின் இலங்கை அரசியலில் பல சர்ச்சைகள் ஏற்பட்டன.
நாடாளுமன்ற அமர்வுகள் நிறுத்திவைக்கப்பட்டன, சில கட்சி தாவல்கள் நடைபெற்றன. ராஜபக்ஷே இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோதமானது எனக் கூறி இலங்கை எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த மனுவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதற்கிடையில் ராஜபக்ஷே பிரதமராக நியமிக்கப்பட்டதுக்கு நாடு முழுவதும் பல எதிர்ப்புகள் கிளம்பின. இதனால் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் ராஜபக்ஷே தோல்வியும் தழுவினார். இதையடுத்து நாடாளுமன்ற கலைப்பின் மூலம் மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறிச் செயல்பட்டார் என்றும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் ராஜபக்ஷே நேற்று பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதன் தொடர்ச்சியாக இன்று காலை இலங்கையின் புதிய பிரதமாக மீண்டும் ரணில் விக்கிர சிங்க பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவி பிரமாணம் செய்துவைத்தார்.