இலங்கை உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் உண்மையை பேசி, கவலையை வெளியிட்டு, மன்னிப்பை கோரி முன்னோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றின் போதே, பிரதமர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
உள்நாட்டுப் போரின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ராணுவத்தினர் என இரண்டு தரப்பிலும் குற்றங்கள் இழைக்கப்பட்டதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு குற்றம் இழைத்தவர்கள் தொடர்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், சாட்சியங்களின் பிரகாரம் அந்த வழக்கு விசாரணைகள் முன்னோக்கி கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2015ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சியிலிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே, உள்நாட்டுப் போரின்போது குற்றம் இழைத்தவர்கள் மீது வழக்குகளை தொடர்ந்திருந்ததாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, சாட்சியங்கள் காணப்படுகின்ற வழக்குகள் முன்னோக்கி கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ள பின்னணியில், இவ்வாறு தொடர்ச்சியாக முன்னோக்கி செல்ல முடியாது என கூறிய பிரதமர், இரு தரப்பினரும் உண்மையை பேசி, கவலையை வெளியிட்டு, மன்னிப்பை கோரி முன்னோக்கி செல்லும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் உயிரிழந்ததாகவும், அவர்கள் உயிரிழந்தமையினாலேயே தான் கட்சியின் தலைமைத்துவத்திற்கு வந்ததாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
தனக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், மாத்திரமே முரண்பாடுகள் காணப்பட்டதாகவும், தனக்கும், தமிழர்களுக்கும் இடையில் எந்தவித முரண்பாடுகளும் கிடையாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனை தொடர்புகொண்டு வினவினோம்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க எவ்வாறான கருத்துகளை வெளியிட்டாலும், இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தாம் வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் பாரியளவிலான போர்க் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இதற்கான விசாரணைகள் சர்வதேச ரீதியிலும், உள்நாட்டிலும் முன்னெடுக்க வேண்டும் என தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார்.
இலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டு போர் 2009ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை சர்வதேச தலையீட்டில் முன்னெடுக்க வேண்டும் என தமிழர் தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- பிபிசி