இலங்கை பிரதமராக பொறுப்பேற்றார் ராஜபக்சே!

இலங்கை பிரதமராக பொறுப்பேற்றார் ராஜபக்சே!

இலங்கை பிரதமராக பொறுப்பேற்றார் ராஜபக்சே!

இலங்கை அரசியலில் உச்சக்கட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். பிரதமர் அலுவலகம் சென்ற ராஜபக்சே தனது அலுவல் பணிகளை துவங்கினார். இலங்கையின் 22-வது பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளார். ராஜபக்சே தலைமையிலான புதிய மந்திரி சபை சற்று நேரத்தில் பதவியேற்றுக் கொள்ளும் என இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை மக்கள் சுதந்திரா கட்சியும், பிரதமர் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணியாக அமைத்து ஆட்சியில் இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்தது. அவர் பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா கோரியும் அவர் மறுத்து விட்டார். கண்டி மாவட்டத்தில் புத்த மதத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பிரதமர் ரணிலிடம் இருந்து சட்டம்- ஒழுங்கு துறையை அதிபர் சிறிசேனா பறித்து உத்தரவிட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது ராஜபக்சே கட்சியான, இலங்கை மக்கள் முன்னணி, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அது தோல்வி அடைந்தது.

சமீபத்தில் இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்லச் சதி நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதில் விக்ரமசிங்கேயின் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீது அதிபர் சிறிசேனா பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதனால், கூட்டணிக்குள் பெரும் அதிருப்தி நிலவி வந்தது.

இந்த சூழலில் ஆளும் விக்ரமசிங்கே அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி அறிவித்தது.

அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக அதிகார போட்டி நிலவி வந்தது. இந்த மோதல் தீவிரமடைந்த நிலையில், அதிபர் சிறிசேனா, பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேயை கடந்த வெள்ளிக்கிழமை (26-10-2018) இரவு அதிரடியாக நீக்கினார். உடனடியாக முன்னாள் அதிபர் ராஜபக்சேயை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து ரனில் விக்ரமசிங்கேவுக்கு அளித்து வந்த பாதுகாப்பும் ரத்து செய்யப்பட்டது. பிரதமர் இல்லத்தில் இருந்து உடனடியாக வெளியேறும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது.அதிபரின் முடிவு சட்ட விரோதமானது என்று கண்டனம் தெரிவித்த ரனில் விக்ரமசிங்கே, தான் தொடர்ந்து பிரதமராக நீடிப்பதாக அறிவித்தார். மேலும், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க தனக்கு உத்தரவிட வேண்டும் என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு அவர் கடிதம் எழுதினார். இதனால் பலப்பரீட்சையை தவிர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தை வருகிற 16-ந் தேதி வரை முடக்கிவைப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார்.

இலங்கை அரசியலில் நேற்று மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. அதிபர் சிறிசேனா, ராஜபக்சேயை பிரதமராக நியமித்து பிறப்பித்த உத்தரவை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஏற்க மறுத்துவிட்டார். அதிபர் சிறிசேனாவுக்கு இலங்கை நாடாளுமன்ற சபாநயகர் எழுதிய கடிதத்தில், ”ரனில் விக்ரமசிங்கேவிற்கு எதிராக இன்னொருவர் தனக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரனில் விக்ரமசிங்கேயின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ரனில் விக்ரமசிங்கேவுக்கு அளித்து வந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டதும் ஏற்கக்கூடியது அல்ல, பிரதமருக்கான சலுகைகள் அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். அதற்கான அத்தனை உரிமைகளும் அவருக்கு உண்டு” என்று தெரிவித்து இருந்தார்.

அதிபர் சிறிசேனா-ரனில் விக்ரமசிங்கே ஆகியோருக்கு இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தற்போது, சிறிசேனாவுக்கு எதிராக சபாநாயகர் போர்க்கொடி உயர்த்தி இருப்பது இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இதனால் கொழும்பு நகரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து கொழும்பு நகரிலும், நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: