வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும் நான்கு முனை களால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. இவை பறிபோய்க் கொண்டிருக்கின்றன என எச்சரிக்கிறார் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்.
முல்லைத்தீவில் உள்ள தமது அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை அவர் நடத்தினார்.
அதன் போது அவர் நைத எச்சரிக்கையை விடுத்தமை யோடு இவற்றைத் தடுக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் –
மகாவலி எல் வலயத்தின் ஊடாக எப்படி முல்லைத் தீவில் உள்ள காணிகள் அதனுடன் சேர்ந்த நிலங்கள் அபகரிப்புக்குள்ளாகின்றனவோ அதேபோல் சத்தமில்லாமல் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.
முள்ளிவாய்க்கால் கிழக்கு என்று சொல்லக்கூடிய இடத்தில் 468 குடும்பங்கள், வட்டுவாகல் கிராமத்தில் 271 குடும்பங்கள் இருக்கின்றன. வட்டுவாகல் கிராமம் 1817 ஆம் ஆண்டு ஜே.பி.லூயிஸ் என்பவரின் புத்தகத்தில் அன்று 117 தமிழ் மக்கள் வாழ்ந்தனர் எனவும், அதேபோல் 1839 ஆண்டு குறிப்பு 162 தமிழ்மக்கள் அங்கு வாழ்ந் தனர் எனவும் சொல்கின்றது. இவ்வாறு இருக்கும் போது தனித்தமிழ் சைவக்கிராமமான இது இன்று சுற்றி வளைக்கப்பட்டு நந்திக்கடலுடன் சேர்ந்து தமிழர்களின் வாழ்வாதாரங்கள் எல்லாம் நசுக்கப்படுகின்றது.
2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு விகாரையும் கிடையாது. ஆனால் 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது ஒரு பெளத்த சிங்கள குடும்பம் கூட இல்லாத தமிழ் கிராமமான வட்டுவாகல் கிராமத்தில் தனியாக பெரிய பெளத்த விகாரை அமைத்து தொல்லியல் திணைக்களம் தமது ஆளுகைக்குள் கொண்டுவரும் நோக்குடன் அதனை செய்துள்ளார்கள்.
அதனை சுற்றி 100 ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டு படைமுகாம் ஒன்று அமைத்துள்ளார்கள். கடற்படை தளம் ஒன்று 617 ஏக்கர் நிலத்தில் அமைத்துள்ளார்கள். வட்டுவாகல் கடற்படை தளம் வட்டுவாகல் முள்ளிவாய்க் கால் கிழக்கு பகுதியினை சேர்ந்த மக்களின் காணிகள் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு பாரிய கடற்படைத் தளமாக அமைக்கப்பட்டுள்ளது.
2017.01.24 ஆம் திகதிய வர்தகமானி மூலம் வன ஜீவராசிகள் திணைக்களம் 4141.67 யஹக்டர் நிலப்பரப்பு, 10230 ஏக்கர் நிலத்தினை நந்திக்கடலோடும் நந்திக் கடலை அண்மித்த பிரதேசத்தினோடும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.
இராணுவம் வனஜீவராசிகள் திணைக்களம், கடற் படைத்தளம், தொல்லியல. திணைக்களம் ஆகியன வட்டுவாகல் சிறு கிராமத்தினை முழுமையாக விழுங்கிக் கொண்டிருக்கின்றன.
இது முன்னர் தனித்தனியாக வட்டுவாகல் கோட்டபாய கடற்படை முகாம் அமைந்துள்ள 617 ஏக்கர் காணிக்காக மக்களுடன் இணைந்து தொடர் போராட்டங்களை செய்து வந்தபோது ஒருபயனும் கிடைக்கவில்லை. ஆனால் பொலிசார் எங்களை கைதுசெய்து இன்றும் அதற்கு வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
தமிழர்களின் பாதுகாப்பிற்கு இருந்தவர்கள் தற்போது இல்லாத நிலையில் 2010 ஆம் ஆண்டிற்கு பின்னர் எங்களை சுற்றிவளைத்து நான்கு பகுதியாலும் வட்டு வாகல் கிராமம் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இதனை சர்வதேசம் எந்தவகையில் பார்த்துக்கொண் டிருக்கின்றது.? பல வடிவங்களில் தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் – தமிழர் களின் சொத்துக்கள், இனம் அழிக்கப்பட்டிருக்கும் நிலையில் – இருக்கின்ற மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக முழுமையாக நம்பி இருக்கும் நந்திக்கடல் ஒருபகுதி கடற் படை ஆக்கிரமித்த படியும், மறுபகுதி இராணுவம் ஆக்கி ரமித்த படியும், வனஜீவராசிகள் திணைக்களமும், தொல் லியல் திணைக்களமும் பெளத்த சிங்கள ஆதிக்கத்தினை கொண்டுவரும் நோக்கமாகத் தமிழர்களை விழுங்கிக் கொண் டிருக்கின்றார்கள்.
இதற்கு சர்வதேசம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.- என்றும் அவர் தெரிவித்தார்.