முல்லைத் தீவு மாவட்டத்தில் வாழும் 42 ஆயிரத்து 178 குடும்பங்களில், 6 ஆயிரத்து 260 குடும்பங்கள் ஆண்கள் இல்லாமல், பெண்களே வழி நடத்தும் குடும்பங்கள் என மாவட்டச் செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வாழும் மொத்தம் 42 ஆயிரத்து 178 குடும்பங்களில் 6 ஆயிரத்து 260 பெண்கள் குடும்பத் தலைவர்களை இழந்த நிலையில் வாழ்கின்றனர்.
இவ்வாறு கணவனை இழந்து வாழும் 6 ஆயிரத்து 260 குடும்பங்களிலும் நேரடியாக யுத்தத்தின் போது கணவனை இழந்த குடும்பங்களாக ஆயிரத்து 830 குடும்பங்கள் உள்ளனர்.
இதன் பிரகாரம் கரைத்துரைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 1,677 விதவைக் குடும்பங்கள் வாழும் நிலையில், 441பேர் நேரடியாக யுத்தத்தின்போது கணவனை இழந்தவர்கள். அதேபோன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 1,470 விதவைக் குடும்பங்கள் உள்ளனர். இவர்களில் 434 பேர் யுத்தம் காரணமாக கணவரை இழந்தவர்கள்.
இவ்வாறே துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 498 விதவைக் குடும்பங்கள் உள்ள நிலையில் இவர்களில் 176 பேர் யுத்தம் காரணமாக கணவனை இழந்துள்ள, அதேவேளை மாந்தை கிழக்கில் வாழும் 1,376 விதவைக் குடும்பங்களில் 411 பேர் யுத்தம் காரணமாக கணவனை இழந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.
இதேபோன்றே ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 905 விதவைக் குடும்பங்கள் வாழும் நிலையில் இவர்களில் 269 பேர் யுத்தத்தின்போது கணவனை இழந்துள்ளார்கள். வெலிஓயாவில் 334 விதவைகள் உள்ள நிலையில் இவர்களில் 69 பேர் யுத்தம் காரணமாக கணவனை இழந்துள்ளார்கள்.
இவ்வாறு ஒரு மாவட்டத்தில் வாழும் 42,178 குடும்பங்களில் 6,260 பேர் அதாவது மொத்தக் குடும்பத்தின் 15 வீதமானோர் விதவைக் குடும்பங்களைக் கொண்ட மாவட்டமா உள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அவ்வாறு காணப்படும் 6,260 விதவைகளிலும் 1,830 பேர் நேரடியாக யுத்தம் காரணமாக விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டத்தில் வாழும் மொத்த விதவைகளின் எண்ணிக்கையில் சுமார் 30 வீதமானவர்கள் நேரடியாகவே யுத்தத்தினால் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளமை குறித்த புள்ளி விபரங்களின் மூலம் உறுதி செய்யப்படுகின்றது.
– தயாளன், ஈழம்