அண்ணன் பிரதமர்; தம்பி ஜனாதிபதி, இலங்கையில் ஓங்கும் ராஜபக்‌ஷேக்களின் ஆதிக்கம்!

அண்ணன் பிரதமர்; தம்பி ஜனாதிபதி, இலங்கையில் ஓங்கும் ராஜபக்‌ஷேக்களின் ஆதிக்கம்!

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபய ராஜபக்‌ஷே 13 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து, இலங்கைக் குடியரசின் ஏழாவது ஜனாதிபதியாக அவர் பொறுப்பேற்றிருக்கிறார். எதிர்முகாமில் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, சஜித் பிரேமதாச அனைத்துப் பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார். அதைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, நேற்று தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, புதிய ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கே தன்னுடைய முகநூல் பதிவில், “கடந்த ஐந்து ஆண்டுகள் நாம் ஜனநாயகத்தை, மனித உரிமைகளை, கருத்து மற்றும் தகவல் சுதந்திரத்தை, சமத்துவத்தை, நல்லிணக்கத்தைப் பாதுகாக்க உழைத்துள்ளோம். 19-வது சட்டத் திருத்தம், அனைத்து அரசமைப்பு நிறுவனங்களையும், அரசியல்மயப்படுவதிலிருந்து காத்தது. அதற்கு, சமீபத்தில் நேர்மையாக நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலே உதாரணம். நான், 19-ம் தேதி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்‌ஷேவை சந்தித்து நாடாளுமன்ற விவகாரங்களைப் பற்றி விவாதித்தேன். நாடாளுமன்றத்தில் எங்களுக்குப் பெரும்பான்மை இருந்தாலும் தேர்தல் முடிவை ஏற்று பதவி விலகுவதே சரி. இனி புதிய ஜனாதிபதி, புதிய அரசாங்கத்தை நியமிக்கலாம். என்னுடைய பதவிக் காலத்தில் நான் போற்றவும்பட்டிருக்கிறேன், தூற்றவும்பட்டிருக்கிறேன். இது, நாட்டில் நாங்கள் மீட்டுத்தந்த சுதந்திரத்தின் பலனே. எனக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கே ராஜினாமாவைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்‌ஷே புதிய பிரதமராகத் தற்போது பொறுப்பேற்றுள்ளார். புதிய அமைச்சரவை தொடர்பான அறிவிப்பும் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, இலங்கையின் மாகாணங்களுக்கான ஆளுநர்களும் புதிதாக மாற்றப்பட்டுள்ளனர்.

இலங்கையில், கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம், 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ளது. 4.5 ஆண்டுகள் முடிகிற வரை நாடாளுமன்றத்தை அதிபரால் கலைக்க முடியாது. இந்த அரசு, வருகிற மார்ச் மாதம்தான் 4.5 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பொறுப்பேற்று, தார்மீகமாக பதவி விலகுவதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். மகிந்த ராஜபக்‌ஷே, அடுத்த தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் அமைகிற வரையில் இடைக்கால பிரதமராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனி எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளே இலங்கையின் ஸ்திரத்தன்மையைத் தீர்மானிக்கும். என்னவானாலும் இலங்கைத் தீவில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என்பது மட்டும் அனைத்து தரப்பினரின் ஒருமித்த கணிப்பாக உள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: