தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் இருந்து விலகினார் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம்!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் இருந்து விலகினார் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரொலோ) அமைப்பின் தவிசாளர் பதவியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் விலகியுள்ளார். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் சிறிகாந்தாவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே சிவாஜிலிங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் எம்.கே.சிவாஜிலிங்கம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்த நிலையிலேயே கட்சியின் சகல பதவிகளிலும் இருந்து விலகியுள்ளார்.

இலங்கையில் வரும் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய இனம் சார்பில் தான் போட்டியிடுவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை தான் கடந்த 6 ஆம் தேதி செலுத்தியதாகவும், வேட்பு மனுவை கடந்த 7ஆம் தேதி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தாக்கல் செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் ரொலோ அமைப்பின் தவிசாளர் பதவியில் இருந்த வண்ணம், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்சியின் அனுமதியை பெறாததை தொடர்ந்து அதற்கு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரொலோ அமைப்பின் தவிசாளர் பதவி மூலம் கிடைத்த அனைத்து பதவிகளிலும் இருந்தும் தான் விலகிக் கொள்வதாக கடந்த மாதம் 6 ஆம் தேதி தான் கடிதமொன்றை தபால் மூலம் அனுப்பியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையிலேயே, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தனக்கு பொது அமைப்புக்கள், புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் அமைப்புக்கள், தொப்புள் கொடி உறவுகளான தாய்த் தமிழகத்தின் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் தனக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்தும் தான் விலகிக் கொள்வதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: