இலங்கை அரசால் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு!

விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு!

விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு!

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்களை ஏற்றிவரும் கப்பல் ஒன்று மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய குண்டு துளைக்காத 8 வாகனங்கள் ஆகியவற்றை தாம் கடலில் மூழ்கடித்து ஜலசமாதி செய்ததாக இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை படையினர் அறிவித்துள்ளனர்.

இந்த எட்டு வாகனங்களும், புலிகளின் கப்பலும் இலங்கைக்கு மேற்குப் புற கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக கடற்படையின் பதில் பேச்சாளர் கே. கே. சி. உதயங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களை ஏற்றி வந்த இந்த “வெலின்” என்ற கப்பல் அந்த அமைப்பின் சர்வதேச நடவடிக்கைகளுக்கான பொறுப்பாளராக இருந்த கே.பி. என்று அழைக்கப்பட்ட குமரன் பத்மநாதன் என்பவர் இலங்கை அரசாங்க படையினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்தோனேசியாவில் இருந்து கைப்பற்றப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

கொஞ்சக் காலம் அதனை இலங்கை கடற்படையினர் பயன்படுத்தி வந்தனர். ஆனால், அது பழுதடையவே அதனை பயன்படுத்துவது கைவிடப்பட்டது.

அது செயற்பட முடியாத நிலையை எட்டவே, தற்போது அதனை ஜலசமாதி செய்வது என்று இலங்கை அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

இலங்கையில் கப்பல்களை உடைக்கும் தொழில்துறை வளர்ச்சியடையாததும் அதற்கான காரணமாக கூறப்படுகின்றது.

பழைய இரும்புகளை இந்தியா போன்ற நாடுகளுக்கு இலங்கை ஏற்றி வருகின்ற போதிலும், கப்பல்களை உடைக்கும் தொழில் போன்றவை இங்கு வளர்ச்சியடையவில்லை.

அதேவேளை, இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான 12 கப்பல்களை தாம் அழித்ததாக இலங்கை அரசாங்கம் அவ்வப்போது அறிவித்திருந்தது.

ஆனால், போர் முடிந்த பிறகு அந்த அமைப்பின் எஞ்சியிருந்த தலைவர்களில் ஒருவரான கே.பி. அவர்கள் தென்கிழக்காசிய நாடு ஒன்றில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பிறகே, இந்தோனேசியாவில் இருந்து இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்தியாவை பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான கிட்டு என்பவர் பயணித்த எம். வி. அகத் என்ற கப்பலை மட்டுமே தாம் அழித்ததாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தக் கப்பலுடன் சேர்த்து 8 குண்டு துளைக்காத வாகனங்களும் கடலில் மூழ்கடிக்கப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதிகளான ஜே. ஆர். ஜயவர்த்தன, ஆர். பிரேமதாஸ, சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் பயன்படுத்திய வாகனங்களே இவையாகும்.

இவர்கள் உட்பட இன்னும் பலர் பயன்படுத்திய பழுதடைந்த சுமார் 25 வாகனங்கள் இவ்வாறு நிர்மூலம் செய்யப்படுவதற்கு காத்திருக்கின்றன.

இந்த வாகனங்களை பழுதுபார்த்து ஏலத்தில் விற்றால் அவை சட்டவிரோத குழுக்களின் பாவனைக்கு சென்று விடலாம் என்ற அச்சம் காரணமாகவே இவை கடலில் மூழ்கடிக்கப்பட்டன என்றும் அவை மிகவும் கடினமாக உருவாக்கப்பட்டுள்ளதால், அவற்றை உடைப்பதும் முடியாததாக இருந்ததாகவும் கடற்படை பேச்சாளர் கூறியுள்ளார்.

ஆழ்கடலில் இந்த கப்பல் மற்றும் வாகனங்கள் மூழ்கடிக்கப்பட்ட பகுதியில் அவை, சிப்பிகள் உட்பட கடல் வாழ் உயிரினங்களை ஈர்க்கும் என்றும் விரைவில் அந்தப் பகுதியை ஒரு சுற்றுலாப் பயணத்துக்கான இடமாக மாற்ற முடியும் என்றும் படையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

  • பிபிசி
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: