சிறிசேன, ராஜபக்ச மீது கொலை முயற்சி: இலங்கையில் இந்தியர் கைது!

சிறிசேன, ராஜபக்ச மீது கொலை முயற்சி: இலங்கையில் இந்தியர் கைது!

சிறிசேன, ராஜபக்ச மீது கொலை முயற்சி: இலங்கையில் இந்தியர் கைது!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சதி முயற்சி குறித்த விசாரணைகளில், இந்தியர் ஒருவரை கைது செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சதி முயற்சி குறித்து, தொலைபேசி உரையாடல் ஒன்று அண்மையில் வெளியாகியது.

‘ஊழலுக்கு எதிரான படையணி’ என்ற அமைப்பின் செயற்பாட்டுப் பணிப்பாளர் நாமல் குமார இதனை வெளியிட்டிருந்தார்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பிரதி போலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவுடன் இந்த உரையாடல் இடம்பெற்றதாகவும், தான் இதுகுறித்து குறித்த போலிஸ் அதிகாரியுடன் பேசியதாகவும், தொலைபேசி உரையாடலை வெளியிட்ட நாமல் குமார குறிப்பட்டிருந்தார்.

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தொலைபேசி உரையாடல் குறித்த அறிக்கையை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

தொலைபேசி உரையாடலை வெளியிட்ட நாமல் குமார என்பவருடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இந்திய பிரஜை ஒருவரை தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

தாமஸ் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த சந்தேக நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அறிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இந்திய பிரஜையின் வாக்குமூலத்தின் மூலம், ஜனாதிபதிக்கு மேலதிகமாக முன்னாள் ஜனாதிபதி, அவரது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என சந்தேகிக்கக்கூடிய பல தகவல்கள் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜையின் வாக்குமூலம் தொடர்பில், குறித்த சந்தேக நபரைத் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதவானிடம் அறிவித்துள்ளது.

குறித்த தொலைபேசி உரையாடல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நாமல் குமார என்பவரை செப்டம்பர் 26ம் தேதி அரச இரசாயனப் பகுப்பாளரிடம் முன்னிலைப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் இருந்த, ஸ்னைபர் ரக துப்பாக்கியொன்று, காணாமல்போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரின் உத்தரவின்படி, சிறப்பு போலிஸ் குழுவினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்னர், ஒட்டுசுட்டான் பகுதியில் வைத்து கிளைமோர் குண்டுகளுடன் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் பெறப்பட்ட தகவலுக்கேற்ப, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், குறிப்பிட்ட ஸ்னைபர் ரக துப்பாக்கியை கைப்பற்றியிருந்தனர். இந்த துப்பாக்கி, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் இருந்தபோது, காணாமல் போயுள்ளதாக விசாரணை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமல் குமார ஊடகங்களின் முன்னிலையில் வெளியிட்ட வாக்குமூலம்:

‘குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி நாலக்க டி சில்வா என்பவர் ஒரு வருடத்திற்கு முன்னரே அறிமுகமானார்.

சர்வதேச பயங்கரவாத செயற்பாடு குறித்து எனக்கு தகவல் கிடைத்திருந்தது. இந்தத் தகவலை இலங்கையின் போலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தேன்.

இந்தச் சந்தர்ப்பத்தில், போலிஸ்மா அதிபரே, குற்றப் புலனாய்வுப் பிரிவின் கட்டளையிடும் அதிகாரி நாலக்க சில்வாவை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

கடந்த காலங்களில் பல விடயங்களை நாலக்க சில்வா என்னுடன் பேசியிருந்தார். இதில் முக்கியமாக 2020 இல் மைத்திரி – கோட்டாபய கூட்டணியமைக்கப் போகின்றனர். தற்போதே இவர்கள் நெருங்கியுள்ளனர்.

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையே மோதல் இருக்கிறது. 2020 நெருங்கும்போது, நிலைமை கைமீறிச் சென்றால், ‘மாகந்துரே மதுஷ்’ என்ற (பாதாள கும்பலைச் சேர்ந்த தலைவன் என்றே நான் அறிந்துள்ளேன்) நபரைப் பயன்படுத்தி, முடிந்ததை செய்யுங்கள் என்றே அந்த அதிகாரி எனக்குக் கூறினார். என்ன செய்ய வேண்டும் என நான் அப்போது கேட்டேன். எது வேண்டுமானாலும் செய்யுங்கள் எனக் கூறினார்.

அதற்குக் காரணம், மாகந்துரே மதுஷ் – கோட்டாபய இடையே பிரச்சினையொன்று இருக்கிறது. அதேபோல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மாகந்துரே மதுஷிற்கும் இடையே பிரச்சினையொன்று இருக்கிறது. போதைப் பொருள் விற்பனைக்கு எதிராக ஜனாதிபதி குரல் கொடுத்து, நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதே இதற்குக் காரணம். இவற்றைப் பயன்படுத்தி ஏதாவது செய்யுமாறே நாலக்க சில்வா கூறுகிறார்.

கிழக்கைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவரின் தொடர்பு அண்மையில் கிடைத்தது. கிழக்கில் தமிழ் கட்சியொன்றில் அதிக வாக்குகளைப் பெற்ற அரசியல்வாதி அவர். இவர் குறித்தும் பல தகவல்கள் கிடைத்தன. மட்டக்களப்பு அல்லது அம்பாறை பிரதேசத்திற்கு ஜனாதிபதி செல்லும்போது தாக்குவோம் என்றும், இந்தத் தாக்குதல் பழியை குறித்த அரசியல்வாதி மீது சுமத்துவோம் என்றும் காவல் அதிகாரி நாலக்க சில்வா எனக்குக் கூறினார்.

இதனை இன்னும் மறைத்து வைப்பது நல்லதல்ல என்று எனக்குத் தோன்றியது. அதனால் இதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த முன் வந்தேன்.

குறித்த காவல் அதிகாரியுடன் இந்த பேச்சுக்கள் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கூட இல்லை. சாதாரண நபர் ஒருவர், பிரதி போலிஸ்மா அதிபர் மீதான குற்றச்சாட்டுக்களை வெளியிட முன்வரமாட்டார். உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை அறிந்தும் நான் இதனை செய்ய முன்வந்தேன். இதனை காவலர்கயிடம் முறையிட்டால் உரிய விசாரணை நடைபெறும் என்ற நம்பிக்கை இருக்கவில்லை. அதனால் தான் ஊடகங்கள் முன்னிலையில் இதனை வெளியிடுகிறேன் என்று நாமல் குமார என்ற தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பிரதி போலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். தொலைபேசி உரையாடலை வெளியிட்ட நபரான நாமல் குமாரவைத் தனக்குத் தெரியாது எனவும், இதனால் தெரியாத நபர் குறித்தோ, அவர் கூறும் விடயம் குறித்தோ கருத்து தெரிவிக்க முடியாது எனவும் பிரதி போலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா தெரிவித்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களின் பின்னர் பிரதி போலீஸ்மா அதிபர் நாலக்க சில்வா, குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவில் இருந்து தகவல் தொழில்நுட்பப் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

நாமல் குமாரவால் வெளிப்படுத்தப்பட்ட தொலைபேசி உரையாடல் யாருடையது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள கொழும்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதன்படி அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நாமல் குமாரவை இன்று ஆஜர்படுத்தி, மேலதிக விசாரணைகள் தொடர்பிலான மேம்பாட்டு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், நாமல் குமாரவுடன் தொடர்புபட்டிருந்தார் என்ற சந்தேகத்தில் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதும், அந்த நபர் வெளியிட்ட தகவல்கள் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருப்பதும் இலங்கை அரசியலில் மேலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: