இலங்கை கடற்படை முகாம் சித்ரவதைகளில் அதிகாரிகள் உடந்தை ; சர்வதேச அமைப்பு அறிவிப்பு!

சிறைபிடிக்கப்பட்டவர்களை அடைத்து வைக்கவும் விசாரிக்கவும் ஆயுதங்கள் வைக்க பயன்படும் நிலக்கீழ் அறைகள் பயன்படுத்தப்பட்டதாக முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் தங்களிடம் தெரிவித்ததாக இண்டர்நேஷனல் ட்ரூத் அண்ட் ஜஸ்டிக் ப்ராஜெக்ட் அறிக்கை தெரிவிக்கிறது.

இலங்கை கடற்படை முகாம்களில், 2008 ல் இருந்து 2014 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சித்ரவதைகள், காணாமற்போதல் மற்றும் கொலை போன்றவற்றிற்கு பெருமளவில் இலங்கை கடற்படை அதிகாரிகள் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்படுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (International Truth and Justice Project) எனும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால் சர்வதேச நாடுகள் இலங்கை உடனான கடற்படை கூட்டுறவினை மீள்பார்வை செய்யுமாறு அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

எனினும் சர்வதேச அமைப்புக்களிடம் சாட்சிகள் காணப்படுவதாக அறிக்கைகள் மூலம் மாத்திரமே தெரிவிக்கப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அறிக்கைகள் காணப்படும் பட்சத்தில் அதனை இலங்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் சர்வதேச அமைப்புக்களிடம் கோரிக்கை விடுக்கின்றார்.

“2009இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததுடன் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட உரிமை மீறல்கள் நிறுத்தப்படவில்லை; அத்துடன் சித்ரவதை ஒரு கடற்படைத்தளத்தில் மட்டும் இடம்பெறவில்லை பல இடங்களில் இடம்பெற்றுள்ளது,” என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“திருகோணமலையில் 11 பேர் கடத்தப்பட்ட வழக்கானது இலங்கையின் நீதித்துறையில் ஒரு மிகப்பெரிய வெற்றியாக கருதப்பட்டது. ஆனால், அது துரதிர்ஷ்டமாக தோல்வியின் அடையாளமாக மாறியுள்ளது. திருகோணமலையில் கடற்படை புலனாய்வின் கட்டளைப் பீடத்திற்குப் பொறுப்பாக இருந்த அல்லது அங்கிருந்த பல மூத்த கடற்படை அதிகாரிகள் கூட விசாரணை செய்யப்படவில்லை, குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு பாதுகாப்பும் பதவி உயர்வும் வழங்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் பாதிக்கப்பட்டு உயிர் வாழ்பவர்கள் ஒருபோதும் விசாரணை செய்யப்படவில்லை,” என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இருந்ததாக கூறப்படும் சித்ரவதை முகாம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

கடற்படைப் புலனாய்வுக்குள் முன்னாள் கடற்படைத் தளபதியால் தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட ஒரு கறுப்பு நடவடிக்கைப் பிரிவு என்ற விசேட புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகள் பற்றி மூத்தஅதிகாரிகளுக்கு தெரிந்திருக்க வேண்டும். மற்றைய விடயங்களுக்கு மத்தியில், விசேட விசாரணைப் பிரிவின் உறுப்பினர்கள் நாட்டின் மிகவும் பாதுகாப்பான கடற்படைத்தளத்தில் ஒரு நிலக்கீழ் சித்ரவதை முகாமினை இயக்கியிருப்பதாகவும் அங்கு பல சிறைக்கைதிகளை பல ஆண்டுகளாக தடுத்து வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றனர்.

கடற்படைக் கட்டளை அமைப்பின் உடந்தை இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் அந்த இடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கொண்டுவரப்படுவதும், பலர் விசாரிக்கப்படுவதும், உணவு வழங்கப்படுவதும் காவல் காக்கப்படுவதும் சாத்தியமற்றது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.

“அங்கு நடந்துகொண்டிருந்தவற்கு முற்றிலும் தாங்கள் பாராமுகமாக இருக்க வேண்டும் என எல்லோருக்கும் தெரிந்திருந்தது என நாங்கள் பேசிய முன்னாள் கடற்படை அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். கடற்படையின் முழுக்கட்டளை அமைப்புமே இந்த வன்முறைகளில் உடந்தையாக இருந்ததுபோல் தெரிவதுடன்மோசமாக களங்கப்பட்டும் உள்ளது,” என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

“காவல் விசாரணைக்கு முற்று முழுதாக ஒத்துழைப்பு வழங்கி இந்த வழக்கில் தொடர்புபட்ட சந்தேக நபர்களுக்கு வெகுமானம் அளிப்பதை நிறுத்தும் வரை இலங்கை கடற்படையினருக்கு தடைவிதிக்கப்பட வேண்டிய நேரம் இதுவாகும். சர்வதேச பங்குதாரர்களுக்கு இப்போதுஅறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் இனிமேலும் இலங்கை கடற்படையினரின் குற்றங்களுக்கு பாராமுகமாக இருக்க முடியாது,” என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.

“ஒரு சந்தர்ப்பத்தில் காவல் துறையினர் சர்வதேச பிடியாணை விடுத்த வேளையில் இலங்கையின் மூத்த அதிகாரி ஒருவர் முக்கிய சந்தேக நபர் ஒருவரை கடற்படைத் தலைமையகத்தில் மறைத்து வைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதன் பின்னர் ஒரு சாட்சியாளரைக் கடத்திச் செல்வதற்கும் முயற்சி செய்தார். சிறையில் கடற்படை அதிகாரிகள் பிரதான காவல் விசாரணை அதிகாரிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். சந்தேக நபர்களில் ஒருவரைத் தவிர அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளர். அதே வேளையில் பல குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் இருப்பினும் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது,” என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை குற்றப் புலனாய்வுத்துறை, ரகசிய போலீஸார், ஜனாதிபதி ஆணைக்குழு ஆகிய நிறுவனங்களிடம் சாட்சியங்களை வழங்கினால், சுயாதீனமான முறையில் விசாரணைகளை நடத்த முடியும் என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார இதற்கு பதிலளிக்கும் வகையில் குறிப்பிட்டார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் ஜூலை 2015 இல் திருகோணமலை நிலக்கீழ் முகாம் பற்றிய புவி நிலையியல் ஆள் கூற்றினை வெளியிட்டதுடன் அந்த ஆண்டின்பிற்பகுதியில் ஐ.நாவிற்கு சென்று நிலக்கீழ் சிறைகள் இருந்ததையும் உறுதிப்படுத்தியதாக அது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் சந்தர்ப்பத்தில், சர்வதேச அமைப்புக்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் அந்த நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் இசுறு சூரியபண்டார குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் தொடர்பில் உண்மையான அக்கறை காணப்படும் பட்சத்தில் குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர் இலங்கைக்கு வருகை தந்து அவர்களின் நலன் குறித்து ஆராயுமாறும் அவர் கூறினார்.

பிபிசி தமிழ்

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: