அரசு தொலைக்காட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மைத்திரிபால சிறிசேன!

அரசு தொலைக்காட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மைத்திரிபால சிறிசேன!

இலங்கை அரசாங்கத் தொலைக்காட்சி சேவையான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.

ஊடகத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை, பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வாறு தனது ஆளுகைக்குள் கொண்டு வந்துள்ளார் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் 1982 ஆம் ஆண்டு 6-ஆம் இலக்க சட்டத்தின் கீழேயே, இலங்கையிலுள்ள அனைத்து தொலைக்காட்சி சேவைகளுக்குமான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைத் தனது அமைச்சின் கீழ் கொண்டு வந்தமையின் ஊடாக, இலங்கையிலுள்ள தனியார் ஊடக நிறுவனங்களையும் தனது அதிகாரத்திற்குள் கொண்டு வந்துள்ளார் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

ஊடகத்துறை அமைச்சின் கீழ் இதுவரை காலம் செயற்பட்டு வந்த இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கடந்த 9 ஆம் தேதி கொண்டு வந்திருந்தார்.

அரசாங்கத்தினால் கடந்த 9ஆம் தேதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் கொண்டு வரப்பட்டிருந்தது.

”தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, மக்களுக்கிடையே சமாதானம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் கட்புல மற்றும் செவிப்புல ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் விருத்தி செய்வதற்கும், அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் நல்ரசனையை விருத்தி செய்வதற்கும் உயர்மட்ட ஊடக ஒழுக்கப் பண்பாட்டை ஏற்படுத்துவதற்கும் தேவையான நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்” என்ற காரணத்தை முன்னிலைப்படுத்தியே இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டதாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் எதிர்ப்பு :

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் செயற்றிறன் இல்லாத நிர்வாகத்தை விலக்கி, திறமையான நிர்வாகமொன்றை ஏற்படுத்துவதற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தடையாக இருந்ததாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், திறைசேரிக்கு சிரமங்களை கொடுக்கும் வகையில் மாதாந்தம் 5 கோடி ரூபா நட்டத்தில் இயங்கி வருகின்றமையை கணக்காய்வாளர் அறிக்கையில் தெளிவூட்டப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், அதிவிசேட வர்த்தமானி ஒன்றின் ஊடாக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை, ஊடகத்துறை அமைச்சிடமிருந்து பாதுகாப்பு அமைச்சுக்கு பொறுப்பேற்றமையானது, சர்ச்சைக்குரிய விடயம் என இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கூறியுள்ளார்.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் கூட, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவில்லை என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் செயற்பாடானது, ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற கருத்தை நிறுத்த முடியாது எனவும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் தெரிவிக்கின்றார்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை தன்னிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு அறிவித்திருக்க வேண்டும் எனவும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கூறியுள்ளார்.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் எதிர்ப்பு :

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்த நடவடிக்கையானது ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த செயற்பாடாகவே தாம் கருதுவதாக இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவிக்கின்றது.

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் எதிர்ப்பு :

அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபனம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டமையை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையானது ஊடக சுதந்திரத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், இதனூடாக ஜனாதிபதி தவறான வழிநடத்தலை மேற்கொண்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளதை அடுத்து, அங்கு பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்குச் சுயாதீனமாகச் செயற்பட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்கள் எதிர்வரும் சில காலங்களில் நடைபெறவுள்ள பின்னணியில் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எட்டியுள்ளவையானது, தமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் குறிப்பிடுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை மீண்டும் ஊடகத்துறை அமைச்சின் கீழ் கொண்டு வரநடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் அறிக்கையின் ஊடாக கேட்டுக்கொண்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: