இனப்படுகொலை குற்றவாளி இலங்கை ராணுவ தளபதியா? – இலங்கையில் வலுக்கும் எதிர்ப்புகள்!

2009-ம் ஆண்டு, விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது, 58 பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா மீது பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் ஐ.நா-வால் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இலங்கையில் ராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருப்பது, சர்வதேச அளவில் எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசு அவரை ராணுவத்தின் உயரிய பொறுப்பிற்கு நியமித்திருப்பது மிகவும் வருத்தமளிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் மிஷேல் பாக்லெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசு, 1.10.2015 அன்று ஐ.நா சபையில் ஒப்புக்கொண்ட தீர்மானம் (30/1), இலங்கையில் மனித உரிமைகளை நிலைநிறுத்துவது, போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வது, பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பனவற்றை வலியுறுத்துகிறது.

சவேந்திர சில்வா, கடந்த மார்ச் மாதம் ராணுவத்தின் தலைமைப் பணியாளராக நியமிக்கப்பட்டபோதே பலத்த எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது. தற்போது, அதையும் மீறி ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சவேந்திர சில்வாவின் நியமனம் மிகவும் வருத்தமளிப்பதாகவும், இலங்கை அரசு, அவருடைய நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசால் வாக்குறுதியளிக்கப்பட்ட சீர்திருத்தங்களுக்கு எதிரான நடவடிக்கை இது. 2012-ம் ஆண்டு, ஐ.நா-வின் மனித உரிமை அறிக்கை சர்வதேசக் குற்றங்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவையுள்ள நபராக சவேந்திர சில்வாவை குறிப்பிட்டிருந்தது. முள்ளிவாய்க்கால் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில், சில்வா தலைமைதாங்கிய 58 பிரிவு நியாயமற்ற தாக்குதல்களை நடத்தியிருப்பதாக, 2015-ம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் இலங்கையில் நடத்திய விசாரணையில் பதிவுசெய்துள்ளது. இந்நிலையில், இத்தகைய குற்றங்கள் எவ்வாறு அங்கீகரிக்கப்பட்டு பரீசலிக்கப்படும் என்பதையே சில்வாவின் நியமனம் காட்டுகிறது. என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

“இது, பாதுகாப்புத் துறையில் சீர்த்திருத்தங்கள் செய்யப்படும் என்கிற இலங்கையின் வாக்குறுதியை மட்டுப்படுத்தி, ஐ.நா அமைதிப்பணிகளில் இலங்கை தொடர்ந்து பணிசெய்வதையும் கேள்விக்குள்ளாக்குவதாக அமைகிறது” என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் மிஷேல் பாக்லெட் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவேந்திர சில்வா நியமனம் மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: