இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முதல் இந்திய வம்சாவளி தமிழர்!

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முதல் இந்திய வம்சாவளி தமிழர்!

இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார். இலங்கையில் பௌத்த மதத்தை பின்பற்றுவோரை தவிர ஏனையோர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க முடியாது என மக்கள் மத்தியில் நிலவிய கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய வம்சாவளித் தமிழரின் பிரவேசம் அமைந்துள்ளது.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு தமிழர்கள் களமிறங்கியுள்ள நிலையில், இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி முதல் தடவையாக களமிறங்கியுள்ளார் சுப்ரமணியம் குணரத்னம்.

கொழும்பில் 1973அம் ஆண்டு பிறந்த சுப்ரமணியம் குணரத்னம், பம்பலபிட்டி இந்து கல்லூரியில் ஆரம்ப கல்வியை தொடர்ந்தார். 1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தை அடுத்து, குணரத்னம் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழகம் நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, மதுரை சேதுபதி உயர்நிலை கல்லூரியில்
உயர்நிலை கல்வியை தொடர்ந்த குணரத்னம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த குணரத்னம், 1995ஆம் ஆண்டு தாய்நாடு நோக்கி திரும்பினார். அதன் பின்னர் தனது வாழ்க்கை ஊடகத்துறைக்காக 15 வருடங்கள் அர்ப்பணித்ததுடன், கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு சமூக திட்டங்களையும் முன்னெடுத்து வந்துள்ளார்.

இலங்கை வாழ் தமிழ் மக்கள் மத்தியில் வாக்களிப்பிற்காக எண்ணத்தை ஊக்குவிக்கும் நோக்குடனேயே தான் இந்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியதாக கூறிய குணரத்னம், வெற்றி பெறும் எண்ணத்துடன் தான் களமிறங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் இனபரம்பல் ரீதியில் தமிழ் பேசும் சமூகம், பெரும்பான்மை சிங்கள சமூகத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளமையினால், ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் வெற்றி பெறுவது மிகப் பெரிய சவால் எனவும் குறிப்பிட்டார்.

எனினும், மக்கள் மத்தியில் செயலிழந்து காணப்படுகின்ற வாக்களிப்பிற்கான உரிமையை ஊக்குவிக்கும் நோக்கத்தை வலுப்படுத்தும் எண்ணத்துடனேயே தான் இந்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் அதனையும் தாண்டி வாழ்கின்ற இலங்கை வாழ் தமிழர்களுக்கு போதியளவு உரிமைகள் உள்ளதாக இந்திய வம்சாவளித் தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் சுப்ரமணியம் குணரத்னம் தெரிவிக்கின்றார்.

அரசியல் உரிமை என்ற ஒரு விடயத்தை முன்னிலைப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஒரு பதற்ற நிலையிலேயே வைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

அரசியல் உரிமை என்ற பதற்ற நிலைமையிலிருந்து தமிழ் மக்களை வெளியில் கொண்டு வர தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கவில்லை என கூறுகின்றார் குணரத்னம்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: